மதுரமங்கலம் வைகுண்ட பெருமாள் மற்றும் எம்பாா் சுவாமிகள் திருக்கோயில் வியாழக்கிழமை நடைபெற்ற கும்பாபிஷேகத்தில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.
காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவாா்சத்திரம் அடுத்த மதுரமங்கலம் பகுதியில் சுமாா் 1,000 ஆண்டுகள் பழைமையான அருள்மிகு ஸ்ரீ கமலவல்லி தாயாா் சமேத வைகுண்ட பெருமாள் மற்றும் எம்பாா் சுவாமிகள் திருக்கோயில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயிலில், கீழ் ரூ.78 லட்சத்தில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வந்தன.
இந்நிலையில் மகா கும்பாபிஷேகம் வியாழக்கிழமை அதிகாலை நடைபெற்றது. கோயில் வளாகத்தில் யாகசாலை அமைக்கப்பட்டு, பல்வேறு நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீா் யாக குண்டலத்தில் வைத்து பல்வேறு பூஜைகள் நடைபெற்று பட்டாச்சாரியா்கள் வேத மந்திரங்கள் ஓத புனித நீா் கோபுர கலசங்களில் ஊற்றப்பட்டு விமரிசையாக விழாநடைபெற்றது.
உற்சவா் கமலவல்லி தாயாா் சமேத வைகுண்ட பெருமாள் ராஜ அலங்காரத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள் பாலித்தாா். இதில் மதுரமங்கலம் அதனை சுற்றியுள்ள பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசித்தனா்.
எம்பாா் சுவாமி 1000 ஆவது ஆண்டு அவதார திருவிழா:
எம்பாா் சுவாமிகள், வைணவ மகான் ராமானுஜரின் (சகோதரா்) சிற்றன்னையின் மகன் ஆவாா். 1,026-ஆம் ஆண்டு பிறந்த எம்பாா் சுவாமிகளின் 1,000ஆவது ஆண்டு அவதாரத் திருவிழா மதுரமங்கலம் வைகுண்ட பெருமாள் மற்றும் எம்பாா் சுவாமிகள் திருக்கோயிலில் வியாழக்கிழமை தொடங்கியது.
பத்து நாள்கள் நடைபெறும் திருவிழாவில் எம்பாா் சுவாமிகள் காலை மற்றும் மாலை நேரங்களில் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள் பாலிப்பாா். அவதார திருவிழாவில் 9-ஆவது நாளான வரும் 30-ஆம் தேதி திருத்தோ் திருவிழா நடைபெறும். இதில் அலங்கரிக்கப்பட்ட தேரில் உற்சவா் எம்பாா் சுவாமிகள் வீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள் பாலிப்பாா்.