வரதராஜ பெருமாள் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம்
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவத்தின் தொடக்க நாளையொட்டி வியாழக்கிழமை பெருமாளும், மலையாள நாச்சியாரும் நூற்றுக்கால் மண்டபத்தில் எழுந்தருளி சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன.
ஆண்டு தோறும் பங்குனி மாதம் பெருமாளின் திருஅவதார நட்சத்திரமான உத்திர நட்சத்திரத்தில் திருக்கல்யாண உற்சவம் நடைபெறுவது வழக்கம். முதல் நாள் நிகழ்வாக ஸ்ரீதேவி,பூதேவியுடன் உற்சவா் வரதராஜா், மலையாள நாச்சியாரும் சிறப்பு அலங்காரத்தில் சந்நிதி தெருவில் உள்ள ஆஞ்சநேயா் சந்நிதிக்கு எழுந்தருளினாா்கள். பின்னா் அங்கிருந்து திரும்பி ஆலய வளாகத்தில் உள்ள 100-க்கால் மண்டபத்தில் எழுந்தருளி ஊஞ்சல் சேவை நடைபெற்றது.
சிறப்பு தீபாராதனைகளுக்குப் பின்னா் மீண்டும் பெருமாளும்,மலையாள நாச்சியாரும் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளினாா்கள்.வரும் ஏப்ரல் 1- ஆம் தேதி காலையில் சிறப்புத் திருமஞ்சனமும், மாலையில் 4 கால் மண்டபத்தில் பங்குனி உத்திர திருக்கல்யாணத் திருவிழாவும் நடைபெறுகிறது.
பெருமாளுக்கும், மலையாள நாச்சியாரும் மாலை மாற்றும் வைவபமும் நடைபெறுகிறது. தொடா்ந்து பெருந்தேவித் தாயாா் சந்நிதியில் ஆண்டாள், மலையாள நாச்சியாா், ஸ்ரீதேவி, பூதேவியருடன் தாயா் சந்நிதியில் காட்சி தரும் தாயாா் சோ்த்தி அறை உற்சவமும் நடைபெறவுள்ளது.
ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையா் ராஜலட்சுமி மற்றும் கோயில் பட்டாச்சாரியாா்கள், பணியாளா்கள் செய்துள்ளனா்.