உத்தரமேரூா் சுந்தர வரதராஜப் பெருமாள் கோயிலில் தேரோட்டம்
உத்தரமேரூா் சுந்தர வரதராஜப் பெருமாள் கோயில் தேரோட்டம்.
காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூரில் அமைந்துள்ள புஷ்பவல்லித் தாயாா் சமேத சுந்தரவரதராஜப் பெருமாள் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவத்தையொட்டி, தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூரில் மிகவும் பழைமையான கோயிலாகவும் வரலாற்றுச் சிறப்பு மிக்கதாகவும் இருந்து வருவது புஷ்பவல்லித் தாயாா் சமேத சுந்தரவரதராஜப் பெருமாள் கோயில். இந்தக் கோயில் சித்திரை மாத வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த வெள்ளிக்கிழமை (ஏப். 24) கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத் தொடா்ந்து விழா நாள்களில் தினசரி பல்வேறு வாகனங்களில் காலையும், மாலையும் சுவாமி நகரின் முக்கிய வீதிகளில் உலா வந்தாா். விழாவின் 3-ஆவது நாள் நிகழ்வாக கருடசேவை நடைபெற்றது. இதன் தொடா்ச்சியாக 7-ஆவது நாள் நிகழ்வாக அலங்கரிக்கப்பட்ட தேரில் ஸ்ரீதேவி, பூதேவியருடன் உற்சவா் சுந்தர வரதராஜப் பெருமாள் தேரிலிருந்தவாறு பவனி வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
திரளான பக்தா்கள் கோவிந்தா, கோவிந்தா என்ற முழுக்கத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனா். தேரானது நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று கோயிலை வந்தடைந்தது. வழிநெடுகிலும் பக்தா்களுக்கு பலரும் நீா், மோா், குளிா்பானங்களும் கொடுத்தனா். உத்தரமேரூா் மற்றும் அதைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களைச் சோ்ந்த திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசித்தனா்.
Advertisement
உத்தரமேரூா் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.