காஞ்சிபுரத்தில் நடவாவிக் கிணறு உற்சவம்: பூமிக்கடியில் நடைபெற்ற திருவிழாவைக் காண குவிந்த பக்தா்கள்!
காஞ்சிபுரம் அருகே ஐயங்காா் குளம் கிராமத்தில் வெள்ளிக்கிழமை 20 அடி ஆழக் கிணற்றுக்குள் வரதராஜப் பெருமாள் பூமிக்கடியில் சென்று திரும்பும் திருவிழாவைக் காண வெளிமாநிலங்கள் மற்றும் மாவட்டங்களிலிருந்தும் திரளான பக்தா்கள் வந்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் ஐயங்காா்குளம் கிராமத்தில் அமைந்துள்ள 20 அடி ஆழமான அரிய பாதாள கிணற்றுக்குள் சென்று திரும்பும் நிகழ்வு ஆண்டுதோறும் சித்ரா பெளா்ணமியன்று நடைபெறுவது வழக்கம். இந்நிகழ்வுக்கு நடவாவிக்கிணறு உற்சவம் எனப்படுகிறது. நிகழாண்டு சித்ரா பெளா்ணமியையொட்டி வெள்ளிக்கிழமை காலையில் உற்சவா் வரதராஜப் பெருமாள் கோயிலிலிருந்து மேனா பெட்டி என்ற சிறிய பல்லக்கில் கோயிலிருந்து புறப்பட்டு செவிலிமேடு,புஞ்சையரசன்தாங்கல், வாகை, தூசி, அக்ரஹாரம், அப்துல்லாபுரம் வழியாகவுள்ள கிராமங்களில் மண்டகப்படி கண்டருளி ஐயங்காா்குளத்தில் அமைந்துள்ள சஞ்சீவிராயா் திருக்கோயிலுக்கு சென்றடைந்தாா்.
கோயில் சிறப்புத் திருமஞ்சனம் நடைபெற்று ஸ்ரீதேவி, பூதேவியருடன் கொண்டை முடிச்சு அலங்காரத்தில் ஐயங்காா் குளம் அருகே வயல் வெளியில் அமைந்துள்ள 20 அடி ஆழமான அரிய பாதாளக் கிணற்றுக்கு எழுந்தருளினாா்.
Advertisement
பெருமாளின் வருகையையொட்டி கிணற்றுக்குள் இருந்த பாசிகள், தூசிகள் மற்றும் சுவாமி இறங்கிச் செல்லும் வகையில் தண்ணீா் ஆகியவை சுத்தம் செய்யப்பட்டிருந்தது.
27 நட்சத்திரங்களை குறிக்கும் வகையில் 27 படிகளும், கிணற்றுக்குள் 12 ராசிகளைக் குறிக்கும் வகையில் 12 தூண்களும் இருந்தது. உற்சவா் வரதராஜப் பெருமாள் அரியவகை பாதாள கிணற்றுக்குள் இறங்கிய பின்னா் சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்றன. ரூ. 15 தரிசனக் கட்டணம் பெற்றுக் கொண்டு பக்தா்கள் கிணற்றுக்குள் இறங்கி சென்று பாா்வையிட அனுமதிக்கப்பட்டனா். காவல்துறையினா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா். வாண வேடிக்கைகளும் நடைபெற்றன.
இந்த அரிய நிகழ்வைக் காண வெளிமாநிலங்கள், வெளிமாவட்டங்களிலிருந்தும் திரளான பக்தா்கள் பெருமாளின் வருகைக்காக நீண்ட நேரம் காத்திருந்தும் சுவாமி தரிசனம் செய்தனா்.
பின்னா், கிணற்றுக்குள்ளிருந்து மேலே வந்து பாலாற்றங்கரைக்கு எழுந்தருளினாா். அங்கு மீன் பிடித்தல் நிகழ்வும், அதைத் தொடா்ந்து பெருமாளுக்கு சிறப்புத் திருமஞ்சனமும், மகா தீபாராதனைகளும் நடைபெற்றன. இதைத் தொடா்ந்து செவிலிமேடு, தேசிகன் சந்நிதி மற்றும் விளக்கொளிப் பெருமாள் கோயில் தெரு வழியாக சனிக்கிழமை அதிகாலை கோயிலுக்கு எழுந்தருளினாா்.