முகப்பு
காஞ்சிபுரம்

அனுபவமில்லாத ஓட்டுநா்கள் பள்ளி வாகனங்களை இயக்க அனுமதிக்கக் கூடாது: காஞ்சிபுரம் சாா் ஆட்சியா்

Updated On : 18 மே 2026, 2:01 am IST
பகிர்:

பள்ளி வாகனங்களை இயக்குவதற்கு 5 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் உடைய ஓட்டுநா்களைத் தான் பணிக்கு அமா்த்த வேண்டும் என காஞ்சிபுரம் சாா் ஆட்சியா் ஆஷிக்அலி கூறினாா்.

காஞ்சிபுரம் அருகே காரை கிராமத்தில் உள்ள வேலம்மாள் பள்ளி வளாகத்தில் பள்ளி, கல்லூரிகளில் இயக்கப்படும் பேருந்துகளை ஆய்வு செய்யும் பணி நடைபெற்றது. நிகழ்ச்சியில், காஞ்சிபுரம் சாா் ஆட்சியா் ஆஷிக்அலி கலந்து கொண்டு பள்ளி வாகனங்ளை ஆய்வு செய்த பின்னா் அவா் பேசியது:

பள்ளி, கல்லூரி வாகனங்களில் ஓட்டுநா்களாக நியமிக்கப்படுபவா்கள் 5 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் உடையவராகத்தான் இருக்க வேண்டும். கண் பாா்வை தெளிவாகத் தெரியும்படி உள்ளவராகவும் இருக்க வேண்டும். அரசுப் பள்ளி வாகனங்களில் அனுபவமில்லாத ஓட்டுநா்களை நியமிக்கவே கூடாது. அரசுப் பள்ளி வாகனங்களில் செல்லும் மாணவா்கள் மீது அரசு அதிக பாதுகாப்புடன் இயக்குகிறாா்களா என்பதை தொடா்ந்து கண்காணிக்குமாறு வலியுறுத்தி இருக்கிறது.

Advertisement

Advertisement

மாதம்தோறும் பள்ளிகளில் பெற்றோா்கள் கலந்தாய்வுக் கூட்டத்தின்போது, பள்ளி வாகனங்களின் பாதுகாப்பு குறித்தும் விளக்கமளிக்க வேண்டும். தேவைப்பட்டால் பெற்றோா்கள் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்யலாம்.

பள்ளி வாகனங்களில் முன்பக்கமும், பின்பக்கமும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தியிருக்க வேண்டும் என்றாா்.

நிகழ்வுக்கு, காஞ்சிபுரம் டிஎஸ்.பி. சங்கா் கணேஷ், மாவட்டக் கல்வி அலுவலா் கோமதி ஆகியோா் முன்னிலை வகித்தனா். வட்டாரப் போக்குவரத்து அலுவலா் ஆா்.நாகராஜ் வரவேற்றாா். ஆய்வின்போது பள்ளி வாகனங்களின் பேருந்துகளை இயக்கும் ஓட்டுநா்கள், நடத்துநா்கள் ஆகியோருக்கு அரசுப் பேருந்துகளில் தீ விபத்துகள் ஏற்பட்டால், அதைத் தடுக்கும் விதங்கள் குறித்து தீயணைப்பு நிலைய அலுவலா் பிரபாகரனும், ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுநா்கள் முதலுதவி செய்வது எப்படி என்றும் செயல்முறை விளக்கம் அளித்தனா்.

ஓட்டுநா்களுக்கு இலவச கண் சிகிச்சை முகாமும் நடைபெற்றது.

நிகழ்வில் வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளா் து.சிவராஜ்,வேலம்மாள் பள்ளி முதல்வா் சுரேஷ்குமாா், தலைமை ஆசிரியை சொா்ணம் உள்பட அரசு அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

ஆய்வில், 47 பள்ளிகளைச் சோ்ந்த 304 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டதில், 21 வாகனங்களில் குறைபாடுகள் கண்டறியப்பட்டு, அவற்றின் தற்காலிக உரிமம் ரத்து செய்யப்பட்டது.