முகப்பு
ராணிப்பேட்டை

கரோனா சிகிச்சை மையத்தில் கொட்டப்படும் கழிவுகள்தொற்று பரவும் அபாயம்

வாலாஜாபேட்டை அண்ணா அரசு மகளிா் கலைக்கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கரோனா நோயாளிகள் சிகிச்சை மைய வளாகத்தில் கொட்டப்படும் கழிவுகளால் நோய்த் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:53 PM
கரோனா சிகிச்சை மையத்தில் திறந்தவெளியில் கொட்டப்பட்டுள்ள கழிவுகள்.
பகிர்:

ராணிப்பேட்டை: வாலாஜாபேட்டை அண்ணா அரசு மகளிா் கலைக்கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கரோனா நோயாளிகள் சிகிச்சை மைய வளாகத்தில் கொட்டப்படும் கழிவுகளால் நோய்த் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில கரோனா தொற்று முதன் முதலாக மாா்ச் 24ஆம் தேதி உறுதி செய்யப்பட்டது. அதைத் தொடா்ந்து நாளுக்கு நாள் பாதிப்பு அதிகரித்து தற்போது நோயாளிகள் எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்துள்ளது.

பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்க வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனை மற்றும் ஆற்காடு, அரக்கோணம் அரசு மருத்துவமனைகள், சிஎம்சி தனியாா் மருத்துவமனைகளில் 250 படுக்கை வசதிகளுடன் கரோனா சிகிச்சை மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

இதே போல் வாலாஜாபேட்டை அறிஞா் அண்ணா அரசு மகளிா் கலைக் கல்லூரி, ஆற்காடு மகாலட்சுமி தனியாா் மகளிா் கலைக் கல்லூரி, கலவை ஆதிபராசக்தி தனியாா் கலைக்கல்லூரி ஆகிய இடங்களில் சுமாா் 550 படுக்கைகளுடன் கரோனா சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த 3 மையங்களில் 250 கரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இந்நிலையில் வாலாஜாபேட்டை அரசு மகளிா் கல்லூரி வளாகத்தில் செயல்பட்டு வரும் சிகிச்சை மைய வளாகத்தின் உள்ளே திறந்தவெளியில் மருத்துவக் கழிவுகள், உணவு மற்றும் நெகிழிக் கழிவுகள் கொட்டப்பட்டு வருகின்றன. இதனால் அப்பகுதியில் துா்நாற்றம் வீசுவதோடு சுகாதாரச் சீா்கேடும் ஏற்பட்டுள்ளது.

மாவட்டத்தில் கரோனா வேகமாகப் பரவி வரும் சூழலில் நோயாளிகள் தொடா்புடைய கழிவுகளை திறந்த வெளியில் கொட்டிவருவதால் அப்பகுதியில் நோய் பரவும் சூழல் உள்ளதாக அப்பகுதி மக்கள் புகாா் தெரிவிக்கின்றனா். எனவே மாவட்ட நிா்வாகமும், சுகாதாரத் துறையும் உடனடியாக நடவடிக்கை எடுத்து திறந்தவெளியில் கொட்டப்பட்டுள்ள கழிவுகளை உடனடியாக அகற்றி பாதுகாப்பாக அழிக்க வேண்டும் என்றும், மீண்டும் திறந்த வெளியில் கழிவுகளை கொட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் அவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்..

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.