சர்வாதிகார முடிவெடுக்க திமுக அல்ல பாஜக! பாஜக பொதுச் செயலர் ராம. சீனிவாசன் சிறப்பு நேர்காணல்
தமிழக பாஜகவின் முகமாக அறியப்படும் தலைவர்களில் முக்கியமானவரும், மிகச் சிறந்த தர்க்கவாதிகளில் ஒருவருமான பாஜக மாநிலப் பொதுச் செயலர் பேராசிரியர் ராம. சீனிவாசன் தினமணிக்கு அளித்த சிறப்பு நேர்காணல்:
அதிமுகவுடனான கூட்டணியில் தொகுதி ஒதுக்கீடு திருப்தி அளிக்கிறதா?
வெற்றி என்பது நம்பிக்கைக்குரியது; தொகுதிப் பங்கீடு என்பது சமரசத்துக்குட்பட்டது என்பதே கூட்டணி தர்மம். கடந்த 2021}இல் பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில் தற்போது 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் ஒரு தேர்தலுக்கும், மற்றொரு தேர்தலுக்குமிடையே ஒப்பீட்டளவில் 33 சதவீதம் அதிக எண்ணிக்கையிலான தொகுதிகளைப் பெற்றுள்ள ஒரே கட்சி பாஜகதான். தொகுதி ஒதுக்கீட்டை முழு மனதுடன் வரவேற்கிறோம்.
திருப்பரங்குன்றம் தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கப்படாதது வருத்தம் அளிக்கிறதா?
திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிட பாஜக விரும்பியது உண்மை. ஆனால், அதை வலியுறுத்தவில்லை என்பதும் உண்மை. அதிமுவினரின் உணர்வுகளையும் புரிந்துகொள்ள வேண்டும் என்ற அடிப்படையில்தான் திருப்பரங்குன்றம் தொகுதியைப் பெற பாஜக முனைப்புக் காட்டவில்லை.
அதிமுக தேர்தல் அறிக்கை தாக்கத்தை ஏற்படுத்துமா?
இது தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றிக்கு முக்கிய உந்துசக்தியாக இருக்கும். இது நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும்.
ஓ.பன்னீர்செல்வம் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து விலகி திமுகவில் இணைந்தது குறித்து?
துரதிருஷ்டவசமானது. தன்னை வளர்த்த கட்சிக்கு துரோகம் செய்தவர்களுக்கும், விசுவாசமற்றவர்களுக்கும் வரலாற்றில் மக்கள் என்ன பாடம் புகட்டினார்களோ அதை ஓ. பன்னீர்செல்வம் மக்களிடமிருந்து கற்றுக் கொள்வார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தவெக இணையாதது குறித்து?
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தவெக இணைந்திருந்தால் மிகப் பெரிய வெற்றி கிடைக்கும் என்பது தவறு. விஜய் முதல்வராக வேண்டும் எனக் கருதுபவர்களே தவெகவுக்கு வாக்களிப்பர். விஜய் எங்கள் கூட்டணியில் இணைந்து "எடப்பாடி பழனிசாமிதான் முதல்வர்' எனப் பிரசாரம் செய்தால் அவருக்கான வாக்கு வங்கி குறைந்துவிடும்.
விஜய்யின் வருகையால் யாருக்கு பாதகம்?
நிச்சயமாக திமுகவுக்குத்தான் பாதகம். விஜய் பெறக்கூடிய ஒவ்வொரு வாக்கும் திமுக ஆதரவு வாக்குதான். நம்பகத்தன்மையில்லாத திமுகவிடமிருந்து, சிறுபான்மையினர் ஒருவரை தலைவராகக் கொண்ட தவெகவுக்கு சிறுபான்மை வாக்கு வங்கி நகர்கிறது என்பதுதான் உண்மை.
திருப்பரங்குன்றம் தீப விவகாரம் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துமா?
நீதிமன்றம் உத்தரவிட்டும்கூட திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்ற முடியவில்லேயே என்ற ஆதங்கம், தமிழக மக்களிடையே திமுக அரசுக்கு எதிராக பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தை ஹிந்து, முஸ்லிம் பிரச்னையாக மாற்ற முயற்சித்த திமுக அரசு மீது மக்களுக்குக் கடுமையான அதிருப்தி உள்ளது. இது நிச்சயம் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
ராமதாஸ் - சசிகலா கூட்டணி குறித்து?
அவர்களுக்காகப் பரிதாபப்படுகிறோம்.
அதிமுகவும் அமமுகவும் இணைந்து செயல்படுமா?
அதிமுகவுக்கும் அமமுகவுக்கும் இடையே இருப்பது பங்காளிச் சண்டை. ஆனால், அமமுகவுக்கும் திமுகவுக்கும் இடையே இருப்பது பகையாளிச் சண்டை. பங்காளியா?, பகையாளியா? என்பதில் தனது இலக்கு பகையாளி திமுகதான் என்பதை டி.டி.வி. தினகரன் உறுதி செய்துள்ளார்.
திமுகவால் ஏற்கெனவே வழங்கப்பட்டு வரும் மகளிர் உரிமைத் தொகை எந்தளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும்?
பெரியளவில் இருக்காது. ஏனெனில், மகளிர் உரிமைத் தொகையாக மாதம் ரூ. 1,000 வழங்கத் தொடங்கிய பிறகும் திமுகவின் வாக்கு சதவீதம் குறைந்து கொண்டுதான் இருந்தது. 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் கிடைத்த அளவுக்கான வாக்குகளை திமுகவால் 2024 மக்களவைத் தேர்தலில் பெற முடியவில்லை. இதுபோல இனிமேல் அவர்கள் எடுக்கும் எந்த முயற்சியும் அவர்களுக்குப் பலன் தராது.
குடும்ப அரசியல் குறித்த உங்களது கருத்து என்ன?
இந்தியாவில் வாரிசு அரசியலை முன்னெடுக்காத தேசியக் கட்சிகள் பாஜகவும், இடதுசாரிகளும் மட்டும்தான். மாநில கட்சியைப் பொருத்தவரை அதிமுகவைத் தவிர ஏனைய கட்சிகள் அனைத்துமே குடும்ப அரசியலைத்தான் முன்னெடுக்கின்றன. இதில் வாரிசு அரசியலில் உச்சம் தொட்ட கட்சிகள் காங்கிரஸýம், திமுகவும். திமுகவில் உழைப்புக்கு மரியாதை கிடையாது. பிறப்பின் அடிப்படையில் பதவி வழங்கும் திமுகவுக்கு "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற வள்ளுவரின் வரியைப் பயன்படுத்த எந்தத் தகுதியும் கிடையாது.
திமுக ஆட்சியின் நிறை, குறைகள் என்ன?
நிறை எனக் குறிப்பிட எதுவும் இல்லை. சட்டம்} ஒழுங்கு பிரச்னை, போதைப் பொருள்கள் கலாசாரம், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் தொடர்ந்து உயர்ந்து வருவது போல பல குறைகள்தான் திமுக ஆட்சியில் நிறைந்துள்ளன.
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தேர்தல் பிரசாரத்தில் எதையெல்லாம் முன்னிறுத்துவீர்கள்?
"அல்லவை தேய அறம் பெருகும்' என்ற வள்ளுவரின் வாக்குக்கேற்ப, தீயதை அகற்ற வேண்டும்; திமுக ஆட்சியை அகற்றினால்தான் தமிழகம் சிறக்கும் என்பதை முன்னிறுத்தியே பிரசாரம் இருக்கும்.
அண்ணாமலைக்கும், நயினார் நாகேந்திரனுக்கும் இடையே முரண்பாடு இருப்பதாகக் கூறப்படுகிறதே?
இது வெளியிலிருந்து உருவாக்கப்படும் மாயை. கட்சியின் கொள்கை, தலைமையின் முடிவு என எதிலிருந்தும் அண்ணாமலை இதுவரை விலகியதில்லை. கட்சியின் மாநிலத் தலைமைக்கு எதிராக இதுவரை எதையும் பேசியதும் இல்லை. பாஜக என்பது கூட்டுத் தலைமையை அடிப்படையாகக் கொண்ட கட்சி. அந்த வகையில், முக்கிய முடிவுகளின்போது அனைத்துத் தலைவர்களையும் கலந்தாலோசித்தே முடிவெடுக்கப்படுகிறது. இதில், அண்ணாமலை, தமிழிசை செüந்தரராஜன், பொன். ராதாகிருஷ்ணன், எச். ராஜா எனப் பலரும் உள்ளனர். சர்வாதிகார முடிவெடுக்க பாஜக ஒன்றும் திமுக அல்ல!.
புதிய தமிழகம் கட்சி கூட்டணியில் இல்லாதது குறித்து?
புதிய தமிழகம் கட்சித் தலைவர் மருத்துவர் க. கிருஷ்ணசாமி தேசிய அரசியலிலும், திமுகவுக்கு எதிரான வாதங்களிலும் வலிமையான கருத்துகளை முன்வைக்கக் கூடியவர். ஆனால், தேர்தல் நேரத்தில் அவருக்கு சில சங்கடங்கள், சவால்கள், இடர்ப்பாடுகள் இருக்கவே செய்கின்றன. அவர் கோரும் எண்ணிக்கையிலான தொகுதிகளை கூட்டணித் தலைமையால் நிறைவேற்ற முடியாத நிலை ஏற்படுகிறது. அவரும் சமரசம் செய்து கொள்வதில்லை. எனவே, அவர் மீது எங்களுக்கு எந்த வருத்தமும் கிடையாது. புதிய தமிழகம் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்திருந்தால் மகிழ்ந்திருப்போம். கருத்தியல் ரீதியாக பாஜகவுடன் பயணிக்கக் கூடியவர் என்ற வகையில் மருத்துவர் கிருஷ்ணசாமிக்கு வாழ்த்துகள்.
நேர்காணல்: எம். சங்கர்