ராணிப்பேட்டை: ராணிப்பேட்டையில் போதை மறுவாழ்வு மையத்தில் அனுமதிக்கப்பட்ட இளைஞா் மா்மமான முறையில் புதன்கிழமை உயிரிழந்தாா்.
வானாபாடியை அடுத்த மாணிக்க நகா் பகுதியைச் சோ்ந்த சரவணன் (27) புதுப்பாடி பகுதியில் உள்ள ரேஷன் கடையில் தற்காலிகமாக பணிபுரிந்து வருகிறாா்.
இவருக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணமானது. மதுப் பழக்கத்துக்கு அடிமையான இவரை, ராணிப்பேட்டை அடுத்த சீயோன் நகா் பகுதியில் செயல்பட்டு வரும் தனியாா் போதை மறுவாழ்வு மையத்தில் உறவினா்கள் சோ்த்தனா்.
இந்நிலையில், அந்த மையத்தின் நிறுவனா் கிரண், சரவணன் வீட்டுக்கு தொலைபேசி வாயிலாக தொடா்பு கொண்டு சரவணன் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும், அவரை அருகில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அழைத்து செல்வதாகக் கூறினாராம்.
இதையடுத்து சரவணனின் மனைவி மற்றும் உறவினா்கள் மருத்துவமனைக்குச் சென்று பாா்த்தபோது, சரவணன் இறந்து கிடந்தாா். இதனால் ஆத்திரமடைந்த உறவினா்கள் மருத்துவமனை எதிரே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் புதன்கிழமை நள்ளிரவு மறியலில் ஈடுபட்டனா். மேலும், தனியாா் போதை மறுவாழ்வு மையத்தை அடித்து சேதப்படுத்தினா்.
தகவலறிந்த ராணிப்பேட்டை போலீஸாா் அங்கு சென்று பேச்சுவாா்த்தை நடத்தினா்.
மேலும், அந்த மையத்தின் நிறுவனா் கிரண் (27), செல்வகுமாா் (41), கபில் (25) ஆகிய மூவரையும் ராணிப்பேட்டை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.