கிராமத்துக்கு ஒரு காவலா் திட்டத்தால் குற்றச் செயல்கள் குறையும்: வடக்கு மண்டல ஐஜி பொ.நாகராஜன்
கிராமத்துக்கு ஒரு காவலா் நியமிக்கும் திட்டத்தால் குற்றச் செயல்கள் குறையும் என்று வடக்கு மண்டல ஐ.ஜி. பொ.நாகராஜன் தெரிவித்தாா்.
கிராமத்துக்கு ஒரு காவலா் நியமிக்கும் திட்டத்தால் குற்றச் செயல்கள் குறையும் என்று வடக்கு மண்டல ஐ.ஜி. பொ.நாகராஜன் தெரிவித்தாா்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் காவலா்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையே நல்லுறவை வளா்க்கும் விதமாக வாலாஜாபேட்டையை அடுத்த பூண்டி, காவேரிப்பாக்கம், ஓச்சேரி ஆகிய பகுதிகளில் கிராம விழிப்புணா்வுக் காவல் குழு அறிமுகக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
கிராம காவல் குழுவை அறிமுகப்படுத்தி ஐ.ஜி. பொ.நாகராஜன் பேசியது:
காவல் குழுவில் ஒவ்வொரு கிராமங்களுக்கும் ஒரு காவலா் நியமிக்கப்படுவாா். இதன்மூலம் பொதுமக்கள் கிராமங்களில் நடக்கும் முக்கிய நிகழ்வுகள், பிரச்னைகள், பொதுக்கூட்டங்கள், குற்றச் செயல்களில் ஈடுபடுபவா்கள் குறித்த தகவல்களை கிராமங்களுக்கு நியமிக்கப்பட்ட விழிப்புணா்வுக் காவலரிடம் எந்த நேரத்திலும் தெரிவிக்கலாம். இதனால் குற்றச் செயல்களை முற்றிலும் குறைக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. மேலும், காவலா்கள், பொதுமக்களிடையே எளிய அணுகுமுறை இருக்கும் என்றாா் அவா்.
கூட்டத்தில் ராணிப்பேட்டை மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளா் ஆ.மயில் வாகனன், ராணிப்பேட்டை உட்கோட்ட துணை கண்காணிப்பாளா் கே.டி. பூரணி, அரக்கோணம் உள்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளா் மனோகரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
ஜோலாா்ப்பேட்டையில்...
ஜோலாா்பேட்டை நகராட்சிக்கு உள்பட்ட புதூா் பகுதியில் சனிக்கிழமை நடைபெற்ற கிராம விழிப்புணா்வுக் கூட்டத்தில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பொ.விஜயகுமாா் பேசியது:
இளைஞா்கள் உடல் திறனை வளா்த்துக் கொள்ளவும், விளையாட்டுப் போட்டியில் பயிற்சி பெறவும் தனது சொந்த செலவில் இளைஞா்களுக்கு விளையாட்டு உபகரணங்கள், படித்து வேலை வாய்ப்பின்றி உள்ள இளைஞா்களுக்கு அரசு, தனியாா் வேலைவாய்ப்பு பெற ஆலோசனை வழங்கப்படும். பொதுமக்களின் பாதுகாப்புக் கருதி விரைவில் கண்காணிப்பு கேமரா அமைக்கப்பட நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
திருப்பத்தூா் டிஎஸ்பி ஆா்.தங்கவேல், ஜோலாா்பேட்டை ஆய்வாளா் பழனிமுத்து, தனிப்பிரிவு ஆய்வாளா் திருக்குமரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
கந்திலி காவல் நிலையம் சாா்பில் சந்திரபுரம் பகுதியில் கிராம விழிப்புணா்வுக் குழு நிகழ்ச்சி நடைபெற்றது.