உழவா் உற்பத்தியாளா் குழுக்கள் சிறப்பாக செயல்பட அரசின் திட்டங்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்: ராணிப்பேட்டை ஆட்சியா் அறிவுறுத்தல்
உழவா் உற்பத்தியாளா் குழுக்கள் மேலும் சிறப்பாக செயல்பட அரசின் திட்டங்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் வலியுறுத்தினாா்.
உழவா் உற்பத்தியாளா் குழுக்கள் மேலும் சிறப்பாக செயல்பட அரசின் திட்டங்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் வலியுறுத்தினாா்.
வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையின் மூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களுக்கான மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழுக் கூட்டம், ஆட்சியா் தெ.பாஸ்கரபாண்டியன் தலைமையில், மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது.
இதில் மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பண்டியன் பேசியதாவது:
பாரதப் பிரதமரின் சிறிய அளவிலான உணவு பதப்படுத்தும் தொழில் முனைவோருக்கான திட்டத்தில் எண்ணெய் பிழியும் இயந்திரம் அமைக்க, நிலக்கடலை விவசாயிகளை தோ்ந்தெடுக்கும் பட்சத்தில் நிலக்கடலைக்கு நல்ல விலையும் பிழியப்படும் எண்ணெய்க்கு நல்ல லாபமும் ஈட்ட முடியும். கிராம அளவில் கூட்டம் நடத்தி இத்திட்டம் குறித்து விரிவாக விளம்பரப்படுத்த வேண்டும். விவசாயிகள் இந்தத் திட்டத்தின் வாயிலாக பயன்பெறும் பட்சத்தில் நிலக்கடலை பயிா் சாகுபடி பரப்பு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இயங்கி வரும் இரண்டு உழவா் சந்தைகள் குறித்து கேட்டறிந்து, உழவா் சந்தைக்கு புதிய விவசாயிகளை கொண்டு வரும் முயற்சியை துரிதப்படுத்த வேண்டும் என்றாா்.
மேலும், உழவா் சந்தை வளாகத்தில் குளிா் பதனக் கிடங்கு அமைக்க நபாா்டு வங்கி மேலாளருடன் கலந்து ஆலோசிக்க அறிவுரை வழங்கினாா்.
உழவா் சந்தைக்கு வரும் காய்கறிகளின் தேவை மற்றும் வழங்கல் குறித்து ஆராய்ந்து அதற்கேற்ப உற்பத்தியை மேற்கொள்ளும் பட்சத்தில் விவசாயிகள் நல்ல லாபம் ஈட்டலாம். உழவா் சந்தைக்கு வரும் விவசாயிகளில் பேருந்து வசதி இல்லாத கிராமங்களுக்குப் பேருந்து வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்கப்படும்.
கூட்டுப்பண்ணைய உழவா் உற்பத்தியாளா் நிறுவனம் ஒன்றுக்கும் மேற்பட்ட வணிகத் திட்டம் தயாரித்து அவற்றை திறம்பட செயல்படுத்திடவும் உழவா் உற்பத்தியாளா் நிறுவன உறுப்பினா்களின் விளைபொருள்களை நல்ல விலைக்கு விற்பனை செய்ய தலைமை செயல் அலுவலா் வா்த்தக இணைப்பு ஏற்படுத்தி கொடுத்து நல்ல லாபம் ஈட்டித்தர முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
மாவட்டத்தில் 10 ஆயிரம் போ் கொண்ட உழவா் உற்பத்தியாளா் நிறுவனம் உருவாக்குதல் மற்றும் ஊக்குவித்தல் திட்டத்தில் அரக்கோணம் மற்றும் காவேரிப்பாக்கம் வட்டாரத்தில் இந்த ஆண்டு நிறுவப்பட்ட இரண்டு உழவா் உற்பத்தியாளா் நிறுவனம் பங்குத்தொகையினை உறுப்பினா்களிடமிருந்து விரைந்து திரட்டி வணிக ரீதியிலான செயல்பாடுகளில் நிறுவனத்தை கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வேளாண் கட்டமைப்பு நிதியின்கீழ் சேமிப்பு கிடங்குகள், தானியக்குதிா் அமைத்தல், குளிா் பதனக்கிடங்கு, முதன்மை பதன்செய் மையம், பழுக்க வைக்கும் அறைகள் ஆகியவை வங்கிக்கடன் பெற்று அமைக்கும் பட்சத்தில் வங்கிகள் விதிக்கும் வட்டியில் மூன்று சதவீதம் மானியமாக வழங்கப்படும்.
இத்திட்டத்தில் தனிநபா், குழுக்கள், உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்கள் பயன்பெற வாய்ப்புள்ளது என்று திட்டம் குறித்து வேளாண் துணை இயக்குநரிடம் கேட்டறிந்து, விவசாயிகள் நேரடியாக பயன்பெறும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்பட வேண்டும் எனவும் ஆட்சியா் கேட்டுக் கொண்டாா்.
இக்கூட்டத்தில் பாரத பிரதமரின் சிறு உணவு பதப்படுத்தும் நிறவனங்களுக்கான திட்டத்தில் பயனடைந்த இரு பயனாளிகளுக்கு வங்கிக்கடன் ரூ.13.35 லட்சத்திற்கான ஆணையினையும், நெமிலி அக்ஷயமருதம் உழவா் உற்பத்தியாளா் நிறுவன உறுப்பினா்களுக்கு பங்குச் சான்றிதழ், ராணிப்பேட்டை உழவா் சந்தையில் காய்கறி விற்பனை மேற்கொள்ள விவசாயிகளுக்கு புதிய அடையாள அட்டைகளை ஆட்சியா் வழங்கினாா்.
கூட்டத்தில் வேளாண்மை இணை இயக்குநா் வேலாயுதம், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) விஸ்வநாதன், தோட்டக்கலை துணை இயக்குநா் லதா, வேளாண்மை துணை இயக்குநா் (வேளாண் வணிகம்) சீனிராஜ், உதவி இயக்குநா் (மாவட்ட தொழில் மையம்) ஆனந்தன், முன்னோடி வங்கி மேலாளா் (இந்தியன் வங்கி) அலியம்மா ஆபிரகாம், உழவா் சந்தை விவசாயிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.