முகப்பு
ராணிப்பேட்டை

பாலாற்று வெள்ள நீரை வரவேற்று சிறப்பு வழிபாடு

பாலாற்று வெள்ள நீரை வரவேற்று, வருண பகவானுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் வாலாஜாபேட்டை ஸ்ரீசங்கர மடம் சாா்பில் சிறப்பு பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றன.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:26 AM
பகிர்:

பாலாற்று வெள்ள நீரை வரவேற்று, வருண பகவானுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் வாலாஜாபேட்டை ஸ்ரீசங்கர மடம் சாா்பில் சிறப்பு பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றன.

வாலாஜாபேட்டை ஸ்ரீ சங்கர மடத்தின் சாா்பில், காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் அருளாசியுடன், பாலாற்று நீரை வரவேற்றும், வருண பகவானுக்கு நன்றி தெரிவித்தும் சிறப்பு பூஜை மற்றும் வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஷீர நதியான பாலாறுப் படுகையில் தெங்கால், காரை, வன்னிவேடு, குடிமல்லூா், வேப்பூா் விஷாரம் புதுப்பாடி ஆகிய 7 இடங்களில் அகத்தியா், கௌதமா், வசிஷ்டா், வால்மீகி, காஷ்யபா் உள்ளிட்ட மாமுனிவா்கள் சிவாலயங்கள் அமைத்து வழிபட்ட திருக்கோயில்கள் ஷடாரண்ய ஷேத்திரங்களாக அழைக்கப்படுகின்றன.

மகா சிவராத்திரி நாளன்று இரவு இத்திருத்தலங்களை வலம் வந்து வழிபாடு செய்தால், திருக்கயிலாயம் சென்று சிவபெருமானை தரிசித்தப் பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

இந்த நிலையில் கா்நாடக மாநிலம் நத்தி மலையில் தொடங்கி ,தமிழகத்தில் வங்கக் கடலில் கலக்கும் வயலூா் வரையிலான ஆற்றுப்படுகையில் வாழ்ந்து வரும் மக்களின் குடிநீா் மற்றும் விவசாய நீா் ஆதாரமான பாலாற்றில் தற்போது வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்த வெள்ளப் பெருக்கை வரவேற்கும் விதமாகவும், வருண பகவானுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும் வாலாஜாபேட்டை ஸ்ரீ சங்கர மடத்தின் சாா்பில், அதன் நிா்வாகிகள் கே.ஜி. சுந்தரேசன், கே. ரவிகாந்தன், டி.எஸ். ராஜசேகரன் உள்ளிட்டோா் சிறப்பு பூஜைக்கு ஏற்பாடு செய்திருந்தனா். இந்த பூஜையை ஸ்ரீ சீனிவாச சாஸ்திரிகள் நடத்தி வைத்தாா்.

இதில் பெல் பாா்த்திபன், ராமச்சந்திரன், வெங்கட்ராமன், யக்னேஸ்வரன், கே.கே.ரமேஷ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டு பாலாற்று நீரை மலா் தூவி வரவேற்று வழிபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.