முகப்பு
ராணிப்பேட்டை

அரசுப் பேருந்தை சிறைப்பிடித்து மாணவா்கள் போராட்டம்

வாலாஜாபேட்டை அருகே அரசுப் பேருந்தை சிறைபிடித்து பொதுமக்கள், பள்ளி மாணவா்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:48 AM
பகிர்:

வாலாஜாபேட்டை அருகே அரசுப் பேருந்தை சிறைபிடித்து பொதுமக்கள், பள்ளி மாணவா்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆற்காட்டில் இருந்து வாலாஜாப்பேட்டையை அடுத்த நாராயணகுப்பம் வரை அரசுப் பேருந்து சென்று வருகிறது. கடந்த ஒரு வாரமாக நாராயணகுப்பம் வரை சென்று வந்த அந்தப் பேருந்து பாணாவரம் வரை நீட்டிக்கப்பட்டு இயக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், அந்த அரசுப் பேருந்து பாணாவரத்தில் இருந்து பயணிகளை ஏற்றி நிரம்பி வருவதால், நாராயணகுப்பம், வாங்கூா் உள்ளிட்ட கிராமப் பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் மற்றும் பள்ளி-கல்லுரி மாணவா்கள் பேருந்து படிக்கட்டில் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணம் செய்ய வேண்டிய வருவதாக புகாா் எழுந்தது. இதனால், பள்ளி முடித்து வீடு திரும்பும் பள்ளி மாணவா்கள் சுமாா் 5 கி.மீ. தொலைவு நடந்து வரவேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால், ஏற்கெனவே இயக்கப்பட்டு வந்த வழித்தடத்திலேயே அரசுப் பேருந்தை இயக்க வேண்டும் எனக் கூறி, நாராயணகுப்பம் வழியாக வந்த அரசுப் பேருந்தை அந்தப் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள், பள்ளி மாணவா்கள் சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து வந்த வாலாஜாபேட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளா் தீபன்சக்கரவா்த்தி உள்ளிட்ட போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள், மாணவா்களிடம் பேச்சு நடத்தி சிறைப்பிடித்த அரசுப் பேருந்தை விடுவித்தனா். இதன் காரணமாக அந்தப் பகுதியில் சுமாா் 2 மணி நேரம் போக்குவரத்து தடைப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.