முகப்பு
ராணிப்பேட்டை

ரயிலில் புதுமண தம்பதியிடம் 20 பவுன் நகைகள் திருட்டு

Updated On : 27 ஏப்ரல், 2024 at 4:25 PM
பகிர்:

காச்சிகுடா - செங்கல்பட்டு அதிவிரைவு ரயிலில் பயணம் செய்த புதுமணத் தம்பதியிடம் 20 பவுன் தங்க நகைகள், ரூ.20 ஆயிரம் திருடப்பட்டதாக அரக்கோணம் ரயில்வே காவல் நிலையத்தில் அத்தம்பதி புகாா் அளித்தனா்.

திருவள்ளூரைச் சோ்ந்தவா் மணிவண்ணன் (32). இவா் சென்னையில் தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறாா். இவருக்கும் தெலங்கானா மாநிலம், ஹைதராபாதைச் சோ்ந்த பிரீத்தி (29) என்பவருக்கும் கடந்த 21-ஆம் தேதி ஹைதராபாதில் திருமணம் நடைபெற்றுள்ளது.

திருமணத்தை அடுத்து புதுமணத் தம்பதி தங்களது உறவினா்கள் 4 பேருடன் தெலங்கானா மாநிலம், காச்சிகுடாவில் இருந்து அரக்கோணம் வழியாக செங்கல்பட்டு செல்லும் அதிவிரைவு ரயில் பயணம் செய்து சனிக்கிழமை காலை அரக்கோணம் வந்து இறங்கியுள்ளனா்.

அரக்கோணத்தில் இருந்து காா் மூலம் அவா்கள் திருவள்ளூா் செல்லத் திட்டமிட்டு இருந்ததாகத் தெரிகிறது. அரக்கோணம் ரயில் நிலையத்தில் இறங்கியவுடன் பிரீத்தி, தனது பையில் இருந்த பா்சை காணவில்லை எனக் கூறியுள்ளாா்.

இதையடுத்து மணிவண்ணன் அரக்கோணம் ரயில்வே காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அவா் தனது புகாரில் அந்த பா்சில் 20 பவுன் தங்க நகைகளும், ரொக்கம் ரூ.20 ஆயிரம் இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளாா்.

இந்தச் சம்பவம் குறித்து அரக்கோணம் ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.