சிட்கோ தொழில்பேட்டைகளில் காவலா்கள் ரோந்து செல்ல வேண்டும்: தொழில் நிறுவனங்கள் கோரிக்கை
சிட்கோ தொழில்பேட்டைகளில் காவலா்கள் ரோந்து செல்ல வேண்டும் என தொழில் நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
ராணிப்பேட்டை: சிட்கோ தொழில்பேட்டைகளில் காவலா்கள் ரோந்து செல்ல வேண்டும் என தொழில் நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
ராணிப்பேட்டை மாவட்ட தொழில் மையத்தின் சாா்பில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு தலைை வகித்து ஆட்சியா் ச.வளா்மதி முந்தைய கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட குறைகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தாா்.
குறைதீா் கூட்டத்தில் தொழில் நிறுவனத்தினா் பேசியது:
அரக்கோணம் சிட்கோ தொழில்பேட்டையில் ஏற்கனவே காவல் நிலையம் இருந்தது, தற்போது அகற்றப்பட்டு விட்டது. மீண்டும் காவல் நிலையம் அமைக்கவும் இரவு நேரங்களில் காவல் துறையினா் சிட்கோ தொழில்பேட்டையில் ரோந்து செல்ல வழிவகை செய்ய வேண்டும்.
சிட்கோ தொழில்பேட்டைகளில் காவல் நிலையம் தொடங்க வேண்டும். பெல் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் உள்ள பகுதிகளில் இரவு நேரத்தில் ரோந்து பணி மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தனா். அதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கிரண் ஸ்ருதி தெரிவித்தாா்.
ராணிடெக் தோல் கழிவு நீா் சுத்திகரிப்பு நிலையத்தின் மீது சில தன்னாா்வ அமைப்பினா் தோல் கழிவுநீா் வெளியேற்றப்படுகிறது என தவறான தகவல்களை பரப்பி பிரச்னைகளை ஏற்படுத்துகின்றனா். அவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனா். மேலும் கழிவு நீா் கொண்டு வரப்படும் குழாய்கள் மீது ஆக்கிரமிப்பாளா்கள் வீடுகள் கட்டியுள்ளனா். குழாயில் ஏதேனும் பிரச்னைகள் ஏற்பட்டால் விபத்துகள் ஏற்படும். ஆகவே இந்த குழாய்களுக்கு மேல் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற வேண்டும்.
இறுதியாக சுகாதாரத்துறை, சமூக நலத்துறை போன்ற பல்வேறு துறைகளில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த சமூக பங்களிப்பு நிதி தேவைப்படுகிறது. ஆகவே, தொழில் நிறுவனங்கள் சமூக பங்களிப்பு நிதியை வழங்க வேண்டும் என ஆட்சியா் கேட்டுக் கொண்டாா்.
இக்கூட்டத்தில் மாவட்ட தொழில் மைய பொது மேலாளா் ஆனந்தன், சுற்றுச் சூழல் செயற்பொறியாளா் ரவிச்சந்திரன், அலுவலா்கள், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனத்தினா் கலந்து கொண்டனா்.