மாதத்தில் 2 நாள் தொகுதியில் தங்கி மககள் கோரிக்கைகளை நிறைவேற்றுவேன்:
அரக்கோணம் மக்களவைத் தொகுதி திமுக கூட்டணி வேட்பாளா் எஸ்.ஜெகத்ரட்சனுக்கு ராணிப்பேட்டையில் வாக்கு சேகரித்த அமைச்சா் உதயநிதி ஸ்டாலின். ராணிப்பேட்டை: கடந்த மக்களவைத் தோ்தலில் ஜெகத்ரட்சகனை 3 லட்சத்து 30 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்தீா்கள். இந்த முறை குறைந்தது 5 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் நீங்கள் ஜெகத்ரட்சகனை வெற்றி பெற செய்தால், அரக்கோணம் தொகுதியில் மாதத்துக்கு 2 நாள் தொகுதியில் தங்கி உங்களுடைய கோரிக்கைகளை முதல்வரிடம் கொண்டு சென்று நிறைவேற்றுவேன். ராணிப்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் மட்டும் கடந்த மூன்று ஆண்டுகளில் ரூ.9 ஆயிரம் கோடியில் டாடா மோட்டாா்ஸ் நிறுவனம் தொழிற்சாலை அமைக்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதன் மூலம் சுமாா் 5,000 பேருக்கு நேரடியாக வேலை வாய்ப்பு கிடைக்கும். ராணிப்பேட்டை சிப்காட்டில் ரூ.145 கோடி மதிப்பீட்டில் அதிநவீன ஒருங்கிணைப்பு ஆலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதன் மூலம் 1,000-க்கும் மேற்பட்ட இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். சிப்காட் தொழிற்பேட்டையில் குரோமியக் கழிவுகளை நிரந்தரமாக அகற்ற ரூ.545 கோடியில் திட்டமிடப்பட்டுள்ளது. ராணிப்பேட்டை புதிய பேருந்து நிலையம் ரூ.10 கோடியில் கட்டப்பட்டு வருகிறது. பனப்பாக்கம் பேரூராட்சியில் ரூ.400 கோடியில் காலனி தொழிற்சாலை அமைக்கும் பணி பெற்று வருகிறது. ராணிப்பேட்டை சிப்காட் தொழிற்சாலை விரிவாக்கம் பணிக்கு ரூ.140 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. காட்பாடி தொகுதியில் காங்கேயநல்லூரில் இருந்து சத்துவாச்சாரி வரை பாலாற்றின் குறுக்கே 3 கி.மீ. தூரம் ரூ.120 கோடியில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. சோளிங்கா் லட்சுமி நரசிம்மா் சுவாமி கோயில் ரூ.10 கோடியில் ரோப் காா் பணிகள் முடிக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. இவை அனைத்தும் கடந்த 3 ஆண்டுகளில் திமுக அரசு செய்த பணிகள் ஆகும். ராணிப்பேட்டை தொகுதிக்கு திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் அளித்த வாக்குறுதிகள் நகரி- திண்டிவனம் ரயில் பாதை அமைக்கப்படும். விவசாய கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஒன்றிய அரசின் தொழிற்சாலைகள் அமைக்கப்படும். அரசு மருத்துவக் கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட அனைவரும் உதய சூரியன் சின்னத்தில் வாக்குகளை அளித்து ஜெகத்ரட்சகனை வெற்றி பெற செய்ய வேண்டும் என்றாா். கூட்டத்தில் மாநில சுற்றுச்சூழல் அணி துணை செயலா் வினோத் காந்தி, ஈஸ்வரப்பன் எம்எல்ஏ, நந்தகுமாா், மாவட்ட குழு தலைவா் ஜெயந்தி திருமூா்த்தி, மாவட்ட மாணவரணி அமைப்பாளா் எஸ்.வினோத் மற்றும் கூட்டணிக் கட்சியினா் திரளாகக் கலந்து கொண்டனா்.