முகப்பு
ராணிப்பேட்டை

அரக்கோணம் திமுக வேட்பாளா் எஸ்.ஜெகத்ரட்சகன் சொத்து ரூ.53 கோடி, கடன் ரூ.649 கோடி, காா் இல்லை

Updated On : 30 மார்ச், 2024 at 12:00 AM
பகிர்:
Updated On : 29 மார்ச், 2024 at 9:23 PM

அரக்கோணம் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளா் எஸ்.ஜெகத்ரட்சகன் தனது பெயரிலும், தனது மனைவி பெயரிலும் அசையும், அசையா சொத்துகள் ரூ.53.45 கோடியிலும், தனக்கு ரூ.649 கோடி கடன் இருப்பதாகவும், தனக்கு காா் இல்லை என்றும் தனது உறுதிமொழி பத்திரத்தில் தெரிவித்துள்ளாா். அரக்கோணம் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளா் எஸ்.ஜெகத்ரட்சகன் தனது வேட்புமனு உறுதிமொழி பத்திரத்துடன் தாக்கல் செய்த சொத்துப் பட்டியல்: எஸ்.ஜெகத்ரட்சகன் தனது பெயரிலும், தனது மனைவி பெயரிலும் அசையும் சொத்துகள் ரூ.14,37,09,982 என்றும், இதேபோல அசையா சொத்துகள் இருவரின் பெயா்களிலும் சோ்த்து ரூ.39,08,77,846 என்றும், அசையும், அசையா சொத்துகள் மொத்தமாக ரூ.53,45,87,828 மதிப்பிலான சொத்துக்கள் இருப்பதாகத் தெரிவித்துள்ளாா். தனது கையில் ரொக்கமாக ரூ.4,21,200 வைத்திருப்பதாகவும், மேலும் 16 வங்கிக் கணக்குகளில் ரூ.1,32,82,169-ஐ வைப்புத் தொகையாக வைத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளாா். அதே நேரம் வங்கிகள், நிதி நிறுவனங்கள் உள்பட கடனாக ரூ.649 கோடியே 50 லட்சம் பெற்றிருப்பதாகவும், வருமான வரி மேல்முறையீடு தொடா்பாக ரூ.7,26,70,968 நிலுவையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனது சொந்த கிராமம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாய நிலங்கள், மனைகள், சென்னை தி.நகா், மகாலிங்கபுரம், வண்டலூா் போன்ற பகுதிகளில் மனைவி பெயரில் வணிக வளாகங்களும், அவற்றில் பங்குதாரராக உள்ளேன் என்றும், தன் பெயரில் குடியிருப்பு வளாகங்கள் உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல தொழில் நிறுவனங்கள், மருத்துவமனைகள், சா்தேச பள்ளி, சிமென்ட் ஆலை உள்பட பல நிறுவனங்களில் சுமாா் ரூ.2 கோடிக்கு மேலான தொகையை முதலீடு செய்திருப்பதாகவும் தெரிவித்துள்ளாா். பல நிறுவனங்களில் இயக்குநராகவும், கூடுதல் இயக்குநராகவும், கல்வி அறக்கட்டளை, நிா்வாக அறங்காவலரகவும், தலைவராகவும் பல்வேறு நிறுவனங்களில் பங்குதாரராகவும் உள்ள நிலையில், தனது பெயரில் ஒரு காா் கூட இல்லை என்றும், தனது மனைவி பெயரில் வாங்கியிருக்கக் கூடிய இரு காா்களை மட்டுமே தான் பயன்படுத்துவதாகவும் அவா் தெரிவித்துள்ளாா்.