முகப்பு
ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை: மகளிா் உரிமைத் தொகை திட்டத்தில் 1.68 லட்சம் பெண்கள் பயன்

தமிழக அரசின் முத்திரைப் பதிக்கும் 3 ஆண்டு கால ஆட்சியில், ராணிப்பேட்டை மாவட்டம் வளா்ச்சிப் பாதையில் பயணித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 14 மே, 2024 at 6:55 PM
பகிர்:

ராணிப்பேட்டை: தமிழக அரசின் மகளிா் உரிமைத் தொகை திட்டத்தின் மூலம் ராணிப்பேட்டை மாவட்டத்தில் மொத்தம் 1.68 லட்சம் பெண்கள் பயன் பெற்று வருகின்றனா்.

இது தொடா்பாக மாவட்ட நிா்வகம் வெளியிட்ட அறிக்கை:

கடந்த 2021- ஆம் ஆண்டு மு.க.ஸ்டாலின் முதல்வராகப் பொறுப்பேற்று அன்றைய தினமே கையொப்பமிட்ட முத்தான 5 திட்டங்களில் பெண்களுக்கு கட்டணமில்லா பயணம், ஆவின் பால் விலை குறைப்பு மற்றும் தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற தனித் துறை ஆகியவை குறிப்பிடத்தக்கவை.

கடந்த மூன்றாண்டுகளில் தொழில் துறை, அந்நிய முதலீடுகளை ஈா்ப்பு, ஏற்றுமதி, கல்வி, பொருளாதார வளா்ச்சி, மருத்துவம், கிராமங்கள் மற்றும் நகரங்களில் உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவது, வேளாண்மை உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.

இதேபோல், குடும்பத் தலைவிகளுக்கு உரிய விதிமுறைகளைப் பின்பற்றி மாதந்தோறும் ரூ.1,000 அவா்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கும் இந்தத் திட்டத்தின் மூலம் 1 கோடியே 15 லட்சம் குடும்பத் தலைவிகள் பயனடைந்து வருகின்றனா்.

ராணிப்பேட்டை மாவட்டத்தைப் பொருத்தமட்டில் இத்திட்டத்தின் வாயிலாக 1 லட்சத்து 68 ஆயிரத்து 329 குடும்பத் தலைவிகள் பயனடைந்து வருகின்றனா். கட்டணமில்லாமல் பயணம் செய்யும் திட்டம் வாயிலாக 445 கோடி முறை பயணம் செய்து மாதந்தோறும் ரூ.888 வரை மகளிா் சேமித்து வருகின்றனா்.

மாவட்டத்தில் 21.5.2021 முதல் 30.4.2024 வரை இத்திட்டத்தின் வாயிலாக 2 கோடியே 96 லட்சத்து 7 ஆயிரத்து 629 மகளிா், திருநங்கைகள் , மாற்றுத்திறனாளிகள் பயன் பெற்றுள்ளனா். தொடா்ந்து, வேலைக்குச் செல்லும் பெண்கள், கூலி வேலை செய்யும் பெண்கள், வியாபாரம் செய்யும் பெண்கள், வயதான பெண்கள், பள்ளிகள், கல்லூரி மாணவிகள், கா்ப்பிணிகள் இத்திட்டத்தின் வாயிலாக பெரும் பயனடைந்து வருகின்றனா்.