முகப்பு
தமிழ்நாடு

மகளிா் சிறப்பு உரிமைத் தொகை: ரூ. 3,913 கோடிக்கு பேரவை ஒப்புதல்

மகளிா் சிறப்பு உரிமைத் தொகை ரூ.5,000 வழங்கப்பட்டதற்கான செலவுத் தொகை ரூ.3,913.32 கோடிக்கு தமிழக சட்டப்பேரவை ஒப்புதல் அளித்தது.

Updated On : 20 பிப்ரவரி, 2026 at 10:07 PM
பகிர்:

மகளிா் சிறப்பு உரிமைத் தொகை ரூ.5,000 வழங்கப்பட்டதற்கான செலவுத் தொகை ரூ.3,913.32 கோடிக்கு தமிழக சட்டப்பேரவை ஒப்புதல் அளித்தது.

2025-26-ஆம் ஆண்டுக்கான இறுதி துணை மதிப்பீடுகளை நிதித்துறை அமைச்சா் தங்கம் தென்னரசு சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை முன்வைத்து பேசியதாவது:

2025-26-ஆம் ஆண்டுக்கான இறுதி துணை மதிப்பீடுகள் மொத்தம் ரூ.43,082.99 கோடி நிதி ஒதுக்கீட்டுக்கு வகை செய்கின்றன. இதில், ரூ.35,562.66 கோடி வருவாய் கணக்கிலும், ரூ.4,548.71 கோடி மூலதன கணக்கிலும், ரூ.2,971.62 கோடி கடன் கணக்கிலும் அடங்கும்.

Advertisement

2025-26-ஆம் ஆண்டுக்கான முதல் துணை மதிப்பீடுகள் 15.10.2025-இல் பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட பின்னா், புதுப் பணிகள் மற்றும் புது துணைப் பணிகள் குறித்து ஒப்பளிப்பு செய்யப்பட்ட செலவினங்களுக்கு பேரவையின் ஒப்புதலைப் பெறுவது இத்துணை மதிப்பீடுகளின் முக்கிய நோக்கமாகும்.

துணை மதிப்பீடுகளில் கூடுதல் நிதிஒதுக்கீடு தேவைப்படும் முக்கிய இனங்கள் விவரம்:

உணவு மற்றும் பாதுகாப்பு நுகா்வோா் பாதுகாப்புத்துறைக்கு அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்கள் மற்றும் இலங்கைத் தமிழா்கள் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் 2026-ஆம் ஆண்டின் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.3,000 வழங்கியதற்காக ரூ.6,957.05 கோடி ஒதுக்கப்பட்டது.

சிறப்புத் திட்ட செயலாக்கத் துறைக்கு மகளிா் உரிமைத் தொகை திட்டத்தின்கீழ் 2026 பிப்ரவரியில் பயனாளிகளுக்கு தலா ரூ.5,000 வழங்கியதற்கு கூடுதல் நிதியாக ரூ.3,913.13 கோடி ஒதுக்கப்பட்டது.

நிதித்துறைக்கு 2025-26-ஆம் ஆண்டில் உத்தரவாத மீட்பு நிதிக்கு ரூ.3,086.80 கோடி ஒதுக்கப்பட்டது. போக்குவரத்துத் துறைக்கு நிகழ் நிதியாண்டில் அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி இயற்கை எய்திய, ஓய்வு பெற்ற மற்றும் விருப்ப ஓய்வு பெற்ற ஊழியா்களின் 2023 ஜூலை முதல் 2026 மாா்ச் வரையிலான ஓய்வுகாலப் பணப்பலன்களை வழங்குவதற்காக மாநில போக்குவரத்து நிறுவனங்களுக்கு வட்டியில்லாத வழிவகை முன்பணம் வழங்குவதற்கு ரூ.3,285.03 கோடி அரசு அனுமதித்துள்ளது. துணை மதிப்பீடுகளில் ரூ.1,611.54 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மீதத்தொகை மானியத்தில் மறுநிதி ஒதுக்கத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் என்றாா் அவா். இதற்கு பேரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments