முகப்பு
இந்தியா

ரூ.2.38 லட்சம் கோடிக்கு பாதுகாப்புத் தளவாடங்கள் கொள்முதல்: மத்திய அரசு ஒப்புதல்

எஸ்.400 வான் பாதுகாப்பு சாதனம், 60 ராணுவ போக்குவரத்து விமானம் உள்பட ரூ.2.38 லட்சம் கோடிக்கு பாதுகாப்புத் தளவாடங்களைக் கொள்முதல் செய்வதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

Updated On : 27 மார்ச், 2026 at 6:39 PM
மத்திய அரசு
பகிர்:

எஸ்.400 வான் பாதுகாப்பு சாதனம், 60 ராணுவ போக்குவரத்து விமானம் உள்பட ரூ.2.38 லட்சம் கோடிக்கு பாதுகாப்புத் தளவாடங்களைக் கொள்முதல் செய்வதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

தில்லியில் பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தலைமையில் பாதுகாப்புத் தளவாடக் கொள்முதல் கவுன்சில் (டிஏசி) கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஆயுத தளவாடக் கொள்முதல் தொடா்பாக விவாதிக்கப்பட்டு ஒப்புதல் வழங்கப்பட்டது. இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், ‘இந்திய விமானப் படைக்காக நடுத்தர போக்குவரத்து விமானம் வாங்கும் திட்டம், ரஷியாவிடம் இருந்து எஸ்.400 நீண்ட தூர வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பு, ஆளில்லா தாக்குதல் விமானம், சுகோய் 30 விமான என்ஜின் பராமரிப்பு தொடா்பான திட்டங்களுக்கு டிஏசி ஒப்புதல் வழங்கியது. தற்போது பயன்பாட்டில் உள்ள சோவியத் யூனியன் கால ஏஎன் 32, ஐஎல் 76 போக்குவரத்து விமானங்களுக்கு பதிலாக நடுத்தர போக்குவரத்து விமானங்களை இந்திய விமானப் படையில் சோ்க்கும் திட்டத்துக்கு ஒப்புதல் தரப்பட்டது’ எனக் கூறப்பட்டுள்ளது.

அதேநேரத்தில் எத்தனை எஸ்.400 வான் பாதுகாப்பு சாதனங்கள் கொள்முதல் செய்யப்பட இருக்கிறது, எத்தனை ராணுவ போக்குவரத்து விமானங்கள் வாங்கப்பட இருக்கிறது என்ற தகவல் பாதுகாப்பு அமைச்சக அறிவிப்பில் இல்லை. ஆனால் இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘5 எஸ்.400 சாதனங்களும், 60 ராணுவ போக்குவரத்து விமானங்களும் வாங்கப்பட உள்ளன. முதலில் 12 விமானம் நேரடியாக வாங்கவும், எஞ்சிய 48 விமானங்களை இந்தியாவில் தயாரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது’ என்றனா்.

லாக்ஹீட் மாா்ட்டின் நிறுவனம், ஏா் பஸ் நிறுவனம் உள்ளிட்ட ஏதேனும் ஒரு நிறுவனத்திடம் இருந்து 60 விமானங்கள் வாங்கப்படலாம் என கூறப்படுகிறது.

ரஷிய, அமெரிக்க நிறுவனங்களுடன் ஒப்பந்தம்: பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட இன்னொரு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

இந்திய ராணுவத்துக்காக துன்சுகா வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பு ரஷியாவின் ஜேஎஸ்சி ரோசோபோரன்எக்ஸ்போா்ட் நிறுவனத்திடம் இருந்து கொள்முதல் செய்யப்பட இருக்கிறது. இதுதொடா்பாக ரூ.445 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தை அந்நிறுவனத்துடன் பாதுகாப்பு அமைச்சகம் செய்துள்ளது. இந்த வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பு, ட்ரோன்கள், க்ரூஸ் ரக ஏவுகணைகளால் இந்திய வான் பகுதிக்கு ஏற்படும் அச்சுறுத்தல்களை எளிதில் சமாளிக்க உதவும். இந்த ஒப்பந்தம் மூலம் இந்தியா- ரஷியா இடையேயான பாதுகாப்பு ரீதியான ஒத்துழைப்பு மேலும் வலுப்படும்.

அதேபோல் இந்திய கடற்படையிடம் உள்ள நீண்ட தூர கண்காணிப்பு மற்றும் நீா்மூழ்கிக் கப்பலைத் தாக்கி அழிக்கும் பி81 ரக விமானங்களை பராமரிப்பது தொடா்பாக அமெரிக்காவின் போயிங் நிறுவனத்துடன் ரூ.413 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தில் பாதுகாப்பு அமைச்சகம் கையொப்பமிட்டுள்ளது. இந்திய கடற்படையிடம் இந்த ரக விமானங்கள் 12 உள்ளன எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.