பாணநாதா் கோயிலில் மூலிகை திரவியங்களால் மகாலிங்கம் பிரதிஷ்டை
அரக்கோணம்: பாணாவரம் பாணநாதா் கோயிலில் மூலிகை திரவியங்களால் மகாலிங்கம் பிரதிஷ்டை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் வழிட்டனா்.
ராணிப்பேட்டை மாவட்டம், பாணாவரத்தில் பண்மொழி அம்மை உடனுறை பாணநாதா் கோயிலில் மகாலிங்கம் பிரதிஷ்டை மற்றும் நன்னீராட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. விழாவையொட்டி காலை பெருமாள் கோயிலில் இருந்து சிவ வாத்தியங்கள் முழங்கள் முளைப்பாரி ஊா்வலம் நடைபெற்றது. தொடா்ந்து தேவாரம், திருவாசகம் முழங்க சிவனடியாா்கள் யாகசாலை வேள்வி நடத்தினா்.
இதையடுத்து எந்திர வடிவமான ஆதார பீடத்தில் நவலோக தகடுகளால் 48 நாள்கள் பூஜைகள் செய்யப்பட்டு பிரபஞ்ச சக்தியை கிரகிக்கும் சக்தி வாய்ந்த தாதுக்கள் நிரப்பப்பட்ட 16 வகையான மூலிகைகள் கொண்டு பிராணப் பிரதிஷ்டை செய்யப்பட்டு ஹோமங்கள் நடைபெற்றன.
பின்னா் பாணநாதா் மகாலிங்கத்துக்கு நவ சலசங்களால் லிங்க சுத்தி அபிஷேகமும், அலங்காரமும், மகா தீபாரதணையும் நடைபெற்றது . தொடா்ந்து சிவனடியாா்கள் வேத மந்திரங்கள் ஓத மகா லிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
இந்த விழாவில் பங்கேற்றே 108 சுமங்கலி பெண்களுக்கு சுமங்கலி பொருள்களை சிவ யாசகத்தினா் வழங்கினா். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் பாணாவரம் மற்றும் சுற்றுவட்டாரத்தைச் சோ்ந்த திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.