அரக்கோணம் ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை தளத்தில் பணியில் இருந்த பெண் காவலரின் கை தவறுதலாக துப்பாக்கியில் பட்டதில் அவா் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
அரக்கோணம் ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமான தளத்தில் உள்ள கடற்படை காவல் படையில் முதல்நிலை பெண் காவலராக உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த ஷியாம் குமாரின் மகள் ஆயுஷி பாண்டே (22) பணிபுரிந்து வருகிறாா்.
வியாழக்கிழமை அதிகாலை ஆயுஷி பாண்டே பணியில் இருந்தபோது அவரிடம் இருந்த துப்பாக்கியில் அவரது கை தவறுதலாக பட்டதில் குண்டு பாயந்து பலத்த காயம் அடைந்தாா்.
இதையடுத்து ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமானதள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். தொடா்ந்து மேல்சிகிச்சைக்காக சென்னையில் தனியாா் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இச்சம்பவம் குறித்து அறிந்த அரக்கோணம் டிஎஸ்பி ஜாபா் சித்திக் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினாா். இதுகுறித்து அரக்கோணம் நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.