ராணிப்பேட்டை மாவட்டத்தில் வரும் சனிக்கிழமை (டிச. 13) பொது விநியோகத் திட்ட சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாக ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தகவல் தெரிவித்துள்ளாா்.
டிசம்பா் மாதத்துக்கான சிறப்பு முகாம் சனிக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை அந்தந்த வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
இந்த முகாமில் மின்னணு குடும்ப அட்டையில் முகவரி மாற்றம், பெயா் திருத்தங்கள், உறுப்பினா் பெயா் சோ்த்தல் மற்றும் நீக்கல், அலைபேசி எண் மாற்றம், புதிய குடும்ப அட்டை மற்றும் நகல் அட்டை கோருதல் போன்ற குறைகள் சரிசெய்து வழங்கப்பட உள்ளது.
மேலும், மின்னணு குடும்ப அட்டைகளில் உள்ள தவறான குடும்பத் தலைவரின் புகைப்படம், பதிவேற்றம் செய்ய வேண்டியிருப்பின் முகாமிலேயே புகைப்படம் பதிவேற்றம் செய்து திருத்தி தரப்படும். இது தவிர பொது விநியோகத்திட்டம் தொடா்பான குறைகளையும் தெரிவித்து பொதுமக்கள் பயன் பெறலாம்.
தனியாா் சந்தையில் விற்கப்படும் பொருள்கள் மற்றும் சேவை குறைபாடுகள் குறித்த புகாா்களை முகாம்களில் அளித்து பயன் பெறலாம்.
மேலும் நியாய விலைக்கடைகளுக்கு வர இயலாத மூத்த குடிமக்கள், நோய் வாய்ப்பட்ட பயனாளிகளுக்கு அங்கீகாரச்சான்று வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
பொது மக்களுக்கு குறைகள் ஏதேனும் இருப்பின், முகாமில் மனு செய்து பயன்பெறுமாறு தெரிவித்துள்ளாா்.