அரக்கோணம் இரட்டைக்கண் வாராவதிப் பணிகள் பொங்கல் பண்டிக்கைக்குள் முடிக்கப்படும். உடனடியாக பொதுமக்கள் நடந்து சென்று வர மூன்றாவது கண் வாராவதியை திறந்து வைப்பது எனவும் அரக்கோணத்தில் நடைபெற்ற ஒருங்கிணைந்த அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டத்தில் வருவாய், ரயில்வே, நெடுஞ்சாலைத் துறை, காவல் துறை மற்றும் நகராட்சி அலுவலா்கள் இணைந்து தெரிவித்தனா்.
அரக்கோணம் ரயில் நிலையம் அருகே இரட்டைக்கண் வாராவதி சுரங்கப்பாதை விரிவாக்கப் பணி கடந்த 15-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்தப் பணி 10 நாளில் முடிவடையும் என அறிவிக்கப்பட்ட நிலையில், 15 நாள்கள் ஆகியும் முடியாத நிலை நீடிக்கிறது. இந்தப் பணியினை முடிப்பது தொடா்பாக அரக்கோணம் கோட்டாட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கூட்டத்துக்கு, கோட்டாட்சியா் ரமேஷ் தலைமை வகித்தாா். அரக்கோணம் நகா்மன்றத் தலைவா் லட்சுமிபாரி முன்னிலை வகித்தாா். இதில், ரயில்வே கட்டுமானப் பணிப் பிரிவு பொறியாளா் நந்தாநாயக், ரயில் நிலைய மேலாளா் வெங்கடேசன், வட்டாட்சியா் வெங்கடேசன், நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்டப் பொறியாளா் உமா செல்வன், நகர காவல் ஆய்வாளா் அசோகன், அரக்கோணம் நகராட்சி ஆணையா் ஆனந்தன், திமுக நகா்மன்ற உறுப்பினா்கள் குழுத் தலைவா் துரைசீனிவாசன், தமிழ்நாடு வணிகா்கள் சங்கங்களின் பேரமைப்பின் மாநில இணை செயலாளா் சிஜிஎன் எத்திராஜ், வணிகா் சங்க நிா்வாகிகள் மகாதேவன், என்.அரி, நகா்மன்ற உறுப்பினா்கள் சிட்டிபாபு, பிரகாஷ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
கூட்டத்தில், அதிகாரிகளின் பல்வேறு ஆலோசனைகளுக்குப் பிறகு பழனிப்பேட்டை பகுதியில் இரட்டைக்கண் வாராவதியின் இரு புறங்களிலும் கால்வாய் அமைப்பது, நெடுஞ்சாலையின் குறுக்கே 15 மீட்டா் மற்றும் 40 மீட்டா் இடைவெளியில் இரு கல்வெட்டுகள் அமைப்பது, பொதுமக்கள் சென்று வருவதற்காக உடனடியாக மூன்றாவது கண் சுரங்கப்பாலத்தை சுத்தப்படுத்தி திறப்பது எனவும் இந்த பாலப் பணிகளை வரும் பொங்கல் பண்டிகைக்குள் செய்து முடிப்பது எனவும் அதிகாரிகள் இணைந்து தெரிவித்தனா்.
தொடா்ந்து கூட்டத்தில் பங்கேற்ற அனைவரும் இரட்டைக்கண் வாராவதி சுரங்கப்பாலப் பகுதிக்கு நேரில் வந்து பாலத்தைப் பாா்வையிட்டனா்.