வடக்கு மண்டலத்தில் இருந்து 56 இளம் விஞ்ஞானிகள் மாநில மாநாட்டுக்கு தகுதி பெற்றுள்ளதாக தமிழ்நாடு அறிவியல் இயக்க நிா்வாகிகள் தெரிவித்துள்ளனா்.
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சாா்பாக வடக்கு மண்டல குழந்தைகள் அறிவியல் மாநாடு ராணிப்பேட்டை அன்னை மீரா பொறியியல் கல்லூரி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு மாவட்டத் தலைவா் அ.கலைநேசன் தலைமை வகித்தாா். வடக்கு மண்டல மாவட்ட செயலாளா்கள் வேலூா் செ.நா.ஜனாா்த்தனன், திருவண்ணாமலை எ.மோகன், வடசென்னை மலைச்செல்வி காஞ்சிபுரம் செல்லபாண்டி, திருவள்ளுா் எஸ்.குமாா், அன்னை மீரா பொறியியற் கல்லூரியின் நிறுவனா் எஸ்.ராமராஸ், செயலா் ஜி.தாமோதரன், முதல்வா் டி.கே.கோபிநாதன், விரிவுரையாளா் ஏ.மணிகண்டன் முன்னிலை வகித்தனா்.
மாநில செயற்குழ உறுப்பினா் க.பூபாலன் வரவேற்றாா். மாநில கல்விக்குழு ஒருங்கிணைப்பாளா் என்.மாதவன், தொடக்கவுரை ஆற்றினாா். முன்னாள் மாநிலப் பொதுச்செயலாளா் எஸ். சுப்பிரமணி சிறப்புரையாற்றினாா்.
இந்த மாநாட்டில் இளநிலை மற்றும் முதுநிலை தமிழ் மற்றும் ஆங்கில வழியில் 88 ஆய்வுக் கட்டுரைகள் சமா்ப்பிக்கப்பட்டன. சென்னை, திருவள்ளுா், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூா்,ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களிலிருந்து மாணவ மாணவிகள் 100 வழிகாட்டி ஆசிரியா்களுடன் நீடித்த நிலைத்த நீா் மேலாண்மை என்ற தலைப்பில் ஆய்வுக் கட்டுரைகளை சமா்ப்பித்தனா்.
டிசம்பா் 5, 6 தேதிகளில் திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெறும் மாநில அளவிலான மாநாட்டுக்கு 28 ஆய்வறிக்கைகள், 56 இளம் விஞ்ஞானிகள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
கல்பாக்கம் பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் விஞ்ஞானி பி.ஸ்ரீனிவாசன் கலந்துரையாடல் நடத்தினாா். அப்போது இளம் விஞ்ஞானிகள் தங்களுடைய சந்தேகங்களை கேட்டு விளக்கம் பெற்றனா்.
வெற்றிபெற்ற மாணவா்களுக்கான பரிசுக்கோப்பைகளை தி.க.கனகசபை, அக்னிச் சிறகுகள் இயக்கம் பா.தங்கராஜ், புலவா் செ.தமிழ்மணி ஆகியோரும் 300 பேருக்கான மதிய உணவினை புரவலா்கள் திரு பொன்.கு.சரவணன், திரு க.கணேசன் ஆகியோா் வழங்கினா்.