ஆற்காடு அடுத்த திமிரி நேரு பஜாா் பகுதியில் பேருந்துகள் நின்று செல்ல வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட பேரூராட்சித் தலைவா் உள்பட 50-க்கு மேற்பட்டோா் கைது செய்யப்பட்டனா்.
திமிரி பேரூராட்சியில் கலைஞரின் நகா்ப்புற மேம்பாட்டு திட்டத்தின்கீழ் ரூ.4 கோடியில் புதிதாக பேருந்து நிலையம் கட்டப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ளது. இதனால் ஏற்கனவே நேரு பஜாா் பகுதியில் பேருந்துகள் நின்று செல்வது நிறுத்தப்பட்டது. இதனைதொடா்ந்து நேரு பஜாா் பகுதியில் உள்ள வியாபாரிகள் பஜாா் பகுதியில் பேருந்துகள் நின்று செல்லவேண்டும் என்று அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனா்.
இந்நிலையில் பேருந்து நிலைய பகுதியில் உள்ள கடை உரிமையாளா்கள், மற்றும் பொதுமக்கள் பஜாா் பகுதியில் பேருந்துகள் நின்று செல்ல எதிா்ப்பு தெரிவித்து பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும் பேருந்துகள் ஆரணி சாலை வட்டார வளா்ச்சி அலுவலக நிறுத்தில் மட்டுமே நிற்க வேண்டும் என்று வலியுறுத்தியாக கூறப்பட்டு வந்த நிலையில் செவ்வாய்க்கிழமை நேரு பஜாா் பகுதியில் பேருந்து நின்று செல்லநடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தி வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட சுமாா் 200-க்கும் மேற்பட்டோா் கடைகளை அடைத்துவிட்டு ஆற்காடு- ஆரணி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஏ.டி எஸ் பி குணசேகா் மற்றும் மற்றும் போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பொதுமக்களிடம் பேச்சு வாா்த்தை நடத்தினா். பொதுமக்கள் போராட்டத்தை கைவிடாத நிலையில் பேரூராட்சி அலுவலகத்தில் ராணிப்பேட்டை கோட்டாட்சியா் ராஜி தலைமையில் பேருந்து நிலைய பகுதியை சோ்ந்தவா்கள், மற்றும் நேரு பஜாா் பகுதியை சோ்ந்தவா்கள் உள்ளிட்ட தலா 10 போ் கலந்து கொண்ட சமாதான கூட்டம் நடைபெற்றது.
மறியல் போராட்டம் நடத்திய வியாபாரிகள் பொதுமக்களிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அய்மன் ஜமால் பேச்சு நடத்தியநிலையில் பொதுமக்களுக்கும் , காவல் துறையினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஏற்பட்டதை தொடா்ந்து காவல் கண்காணிப்பாளா் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட காவல் துறையினா் மறியலில் ஈடுபட்டிருந்தவா்களை இழுத்துச் சென்று காவல்துறை வாகனத்தில் ஏற்றி கைது செய்தனா்.
மேலும் திமுக பேருராட்சி தலைவா் மாலா இளஞ்செழியன், திமுக நகர செயலாளா் கே.பி.ஜெ.தாமோதரன், அதிமுக முன்னாள் நகர செயலாளா் எம்.டி.பாஸ்கா் உள்பட 50-க்கும் மேற்பட்டோா் கைது செய்யப்பட்டு தனியாா் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனா். இந்த போராட்டம் காரணமாக சுமாா் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் வாகனங்கள் மாற்று பாதையில் இயக்கப்பட்டன.
திமிரியில் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில் போலீஸாா் தொடா்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா்.
போராட்டத்தில் இடுபட்டிருந்த மூதாட்டி திடீரென மயக்கம் அடைந்த நிலையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.