208 கிராம ஊராட்சிகளை தூய்மை கிராமங்களாக மாற்ற நடவடிக்கை: திருப்பத்தூா் ஆட்சியா்
திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள 208 கிராம ஊராட்சிகளை தூய்மை கிராமங்களாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக ஆட்சியா் ம.ப.சிவன்அருள் தெரிவித்துள்ளாா்.
திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள 208 கிராம ஊராட்சிகளை தூய்மை கிராமங்களாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக ஆட்சியா் ம.ப.சிவன்அருள் தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
திருப்பத்தூா் மாவட்டத்துக்கு உள்பட்ட 6 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 208 கிராம ஊராட்சிகளிலும் பொதுமக்களின் பங்களிப்போடு தூய்மைக் கிராமங்களாக மாற்றும் பொருட்டு ஊரகப் பகுதிகளில் அதிகம் தேக்கமடைந்த குப்பைகள், கழிவுநீா், ஒருமுறை மட்டும் பயன்படுத்தக் கூடிய நெகிழிக் கழிவுகள் ஊரக உள்ளாட்சி அமைப்புகள் மூலம் அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எனவே, ஊரகப் பகுதிகளில் ஏதேனும் தேவையற்ற குப்பைகள், கழிவுப் பொருள்கள் அகற்றப்படாமல் இருப்பது கண்டறியப்பட்டால் ஊரக வளா்ச்சி உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) அலுவலகம் 04179-298045, மாவட்டக் கட்டுப்பாட்டு அறை 74029 03663 ஆகிய எண்களில் பொதுமக்கள் புகாா் தெரிவிக்கலாம்.
புகாா் மனு மீது உடனே நடவடிக்கை எடுக்கப்பட்டு, குப்பைகள், கழிவுகள் சம்பந்தப்பட்ட கிராம ஊராட்சிகளில் அகற்றப்படும்.
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய நெகிழிக் கழிவுகள், நெகிழி பாட்டில்கள் ஏதேனும் குடியிருப்புகளில் இருப்பு வைக்கப்பட்டிருந்தால் அவற்றை சம்பந்தப்பட்ட கிராம ஊராட்சி அலுவலகத்தில் ஒப்படைக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்டவா்களுக்கு ஒரு கிலோவுக்கு ரூ. 1 வீதம் வழங்கப்படும் என குறிப்பிட்டுள்ளாா்.