முகப்பு
தற்போதைய செய்திகள்

பள்ளி மாணவி வன்கொடுமை செய்து கொல்லப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது: எடப்பாடி பழனிசாமி

மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்டிருப்பதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது என இபிஎஸ் கூறியிருப்பது...

Updated On : 12 மார்ச், 2026 at 1:42 PM
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி - கோப்புப்படம்
பகிர்:

தூத்துக்குடி மாவட்டம் வேடநத்தம் பகுதியில் 12-ம் வகுப்பு மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்டிருப்பதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:

தூத்துக்குடி மாவட்டம் வேடநத்தம் பகுதியில் 12-ம் வகுப்பு மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்டிருப்பதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

Advertisement

பாலியல் வன்கொடுமையும் , பெண்களுக்கான பாதுகாப்பின்மையும், தமிழகத்தில் நாள்தோறும் வரும் செய்தியாகி விட்ட நிலையில், சிறுமியைக் காணவில்லை என உறவினர்கள் காவல்துறையிடம் புகார் அளித்தும் மெத்தனப் போக்குடன் செயல்பட்டுள்ளது காவல்துறை. இந்த வெட்கக்கேடான செயல், திமுக ஆட்சியின் லட்சணத்தை வெட்டவெளிச்சமாக்கியுள்ளது.

பத்தாம் வகுப்பில் நன்கு படித்து மாவட்ட அளவில் பரிசு பெற்று, தற்போது 12-ஆம் வகுப்பு பயிலும் ஒரு மாணவியைக் காணவில்லை என்று புகாரளிக்க பெற்றோர் வந்தால், நடவடிக்கை எடுப்பதற்கு மாறாக, மிகவும் அலட்சியமாகவும், காணாமல் இருந்த பெண்ணை சந்தேகிக்கும் வகையிலும் காவல்துறை செயல்பட்டதாக வரும் தகவல்கள், திமுக ஆட்சியில் காவல்துறை எந்த அளவிற்கு பெண்கள் பாதுகாப்பில் அக்கறை இன்றி சீர்கெட்டுள்ளது என்பதை காட்டுகிறது.

குற்றவாளிகளைக் கண்டறிந்து கைது செய்ய வேண்டுமென உறவினர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றதாகவும், அவர்களிடம் காவல்துறையும், திமுக சட்டப்பேரவை உறுப்பினரும் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் செய்திகள் வருகின்றன.

குற்றவாளிகளை உடனே கண்டறிந்து விட்டால், உறவினர்கள் போராட்டத்தை முடித்துவிடப் போகின்றனர். இதற்கு ஏன் ஒரு திமுக சட்டப்பேரவை உறுப்பினர் வந்து சமாதானம் பேச வேண்டும்? எதையாவது மறைக்கவோ, வழக்கை நீர்த்துப் போகச் செய்யவோ, குற்றவாளிகளை ஏதேனும் வகையில் காப்பாற்ற வேண்டும் என திமுகவோ, திமுக அரசோ முயற்சிக்கிறதா?

வேடநத்தம் பாலியல் கொலைக் குற்றத்திற்கான எச்சரிக்கை இருந்தும் அதைத் தடுக்காமலும், குற்றவாளிகளைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்காமலும் இருக்கும் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.

வேடநத்தம் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடர்புள்ள குற்றவாளிகள் அனைவரையும் உடனடியாக கைது செய்து, அனைவர் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென முதல்வர் மு.க.ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன் என்று அவர் கூறியுள்ளார்.

காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம்

வேடநத்தம் 12 ஆம் வகுப்பு பள்ளி மாணவி காணாமல் போனது குறித்து பெற்றோர் புகார் அளித்தபோது காவல்துறையினர் புகாரை வாங்கவில்லை என்றும், பெண் காவல் ஆய்வாளர் அவதூறாக பேசியதாக பெற்றோர் புகார் அளித்ததுடன் முறையாக விசாரித்திருந்தால் மகளை உயிருடன் மீட்டிருக்கலாம் என பெற்றோர் வேதனை தெரிவித்தினர்.

இந்த நிலையில், மகளிர் காவல் நிலைய பெண் காவல் ஆய்வாளர் பிரவீனாவை பணியிடை நீக்கம் செய்து நெல்லை சரக டிஐஜி சரவணன் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், இந்த வழக்கில் சந்தேகத்தின் பேரில் அதே ஊரைச் சேர்ந்த நான்கு பேரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

summary

The brutal murder of a school girl is shocking says Edappadi Palaniswami

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.