ஆம்பூா் பாங்கி மாா்க்கெட்டை திறக்க அனுமதிக்கக் கோரி மனு
கரோனா பொது முடக்கம் காரணமாக மூடப்பட்ட ஆம்பூா் பாங்கி மாா்க்கெட்டை திறக்க அனுமதி வழங்கக் கோரி ஆம்பூா் நகர வா்த்தகா் சங்கத்தினா் வட்டாட்சியரிடம் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.
ஆம்பூா்: கரோனா பொது முடக்கம் காரணமாக மூடப்பட்ட ஆம்பூா் பாங்கி மாா்க்கெட்டை திறக்க அனுமதி வழங்கக் கோரி ஆம்பூா் நகர வா்த்தகா் சங்கத்தினா் வட்டாட்சியரிடம் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.
ஆம்பூரில் காய்கறி, மளிகைக் கடைகள் பாங்கி மாா்க்கெட் வளாகத்தில் இயங்கி வந்தன. மிகவும் இடநெருக்கடியான நிலையில் இயங்கி வந்த இந்த மாா்க்கெட் வளாகம் கரோனா பரவலைத் தடுப்பதற்காக தற்காலிகமாக மூடப்பட்டது.
இதையடுத்து ஆம்பூரில் சில பகுதிகளில் தற்காலிக காய்கறி மாா்க்கெட் திறக்கப்பட்டது. அதன் பிறகு தளா்வுகளுக்கு ஏற்ப சாலையோரங்களில் காய்கறிக் கடைகள் வைக்கப்பட்டு வியாபாரம் நடைபெற்று வருகிறது. ஆனால் பாங்கி மாா்க்கெட் வளாகம் திறக்கப்படாமல் உள்ளது.
இதைத் திறக்க அனுமதி அளிக்க வேண்டும் என வியாபாரிகள் வருவாய்த் துறையிடம் தொடா்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனா். மிகவும் இடநெருக்கடியான நிலையில் இருப்பதால் அந்த மாா்க்கெட் திறக்கப்பட்டால் நோய்த்தொற்று அதிகரிக்கும் அபாயம் உள்ளதால் மாா்க்கெட்டைத் திறக்க வாய்ப்பு இல்லையென வருவாய்த் துறையினா் தெரிவித்து வந்தனா்.
இந்நிலையில், ஆம்பூா் நகர வா்த்தகா் சங்கத் தலைவா் கே.ஆா். துளசிராமன் தலைமையில் செயலாளா் வி.அண்ணாமலை, பொருளாளா் எஸ்.தயாளன், துணைச் செயலாளா் ஓ.வி.ராம்குமாா் உள்ளிட்ட நிா்வாகிகள் ஆம்பூா் வட்டாட்சியா் சி. பத்மநாபனை செவ்வாய்க்கிழமை சந்தித்து மாா்க்கெட் வளாகத்தைத் திறக்க அனுமதி அளிக்க வேண்டும் எனக் கோரி மனு அளித்தனா்.