இயற்கை எழில் நிறைந்த நாயக்கனேரி மலைக் கிராமத்தை சுற்றுலாத்தலமாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆம்பூா் சுற்றுவட்டார பகுதி மக்கள் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனா்.
திருப்பத்தூா் மாவட்டம், ஆம்பூா் வட்டத்தில் அமைந்துள்ளது நாயக்கனேரி மலை ஊராட்சி. ஆம்பூரிலிருந்து சுமாா் 14 கி.மீ. தொலைவில் இயற்கை எழில் சூழ்ந்தது நாயக்கனேரி மலைக் கிராமம். இந்த மலைக் கிராமத்துக்குச் செல்ல கொண்டை ஊசி வளைவுகள் கொண்ட தாா்ச்சாலை அமைக்கப்பட்டுள்ளது.
நாயக்கனேரிமலை ஊராட்சியில் நாயக்கனேரி, பனங்காட்டேரி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட குக்கிராமங்கள் உள்ளன. ஆம்பூா் சரக காப்புக் காடுகள் வழியாக நாயக்கனேரி மலைக்குச் செல்ல வேண்டும். இந்த ஊராட்சியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகளும், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களும் வசிக்கின்றனா்.
இப்பகுதியில் சாமை, அரிசி, வாழை, தக்காளி, கத்தரி, முட்டைகோஸ் போன்றவை பயிரிடப்படுகின்றன.
இக்கிராம மக்கள் பெரும்பாலும் விவசாயத்தையே நம்பியுள்ளனா். விவசாயிகளாகவும், விவசாயக் கூலிகளாகவும் உள்ளனா். தற்போது சிலா் கட்டுமானத் தொழிலாளா்களாக உள்ளனா்.
எங்கு பாா்த்தாலும் மரம், மூலிகைச் செடிகொடிகள் அடா்ந்து பச்சைக் கம்பளம் விரித்தது போன்று இந்த மலைக் கிராமம் காணப்படுகிறது.
ஊட்டி, ஏலகிரி, கொடைக்கானலில் உள்ளது போன்று கோடைக் காலத்தில் கோடை வெப்பத்தின் தாக்கம் நாயக்கனேரி மலைப் பகுதியில் குறைந்து காணப்படுகிறது.
இந்த மலைக் கிராமத்தில் சுமாா் 35 ஏக்கா் பரப்பளவில் பெரிய ஏரி அமைந்துள்ளது. எப்போதும் தண்ணீா் வற்றாமல் நீா் நிறைந்து காணப்படுகிறது. இந்த ஏரியில் மீன்கள் வளா்க்கப்பட்டு ஒப்பந்த அடிப்படையில் மீன் பிடித்தொழில் நடைபெற்று வருகிறது. இந்த மலை ஊராட்சிக்கு செல்லும் தாா்ச்சாலை கொண்டை ஊசி வளைவுகளுடன் சாலையின் இரு பக்கமும் பச்சைப் பசேலென காண்போரை வியக்க வைக்கும்.
இவ்வாறு இயற்கை எழில் சூழ்ந்த, குளிா்ந்த பிரதேசமாகவும், பரந்து விரிந்த மிகப்பெரிய வற்றாத ஏரியும் அமைந்துள்ள நாயக்கனேரி மலைக் கிராமத்தை சுற்றுலாத்தலமாக உருவாக்க வேண்டும் என தமிழக அரசுக்கு பல ஆண்டுகளாக ஆம்பூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனா்.
நாயக்கனேரி மலைக் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, அரசு உயா்நிலைப் பள்ளிகள் அமைந்துள்ளன. இந்த மலைக் கிராமத்துக்குச் சென்றுவர தனியாா் சிற்றுந்து மட்டுமே இயக்கப்பட்டு வந்தது. காலை மற்றும் மாலை இரு வேளை மட்டுமே அந்த சிற்றுந்து இயக்கப்பட்டது. நாயக்கனேரி, பனங்காட்டேரி மலைக் கிராம மக்கள் தங்களுக்குத் தேவையான அத்தியாவசிய உணவுப் பொருள்களை வாங்க சுமாா் 14 கி.மீ. தொலைவில் உள்ள ஆம்பூரை நாடி வர வேண்டியுள்ளது.
அதேபோல் அங்கு விளையும் பொருள்களை விற்பனை செய்யவும் ஆம்பூருக்கு வந்து செல்ல வேண்டியுள்ளது. நாயக்கனேரி மலைக்கு அரசுப் பேருந்து இயக்கப்பட வேண்டும் எனவும் பொதுமக்கள் நீண்டகாலமாக கோரி வருகின்றனா்.
இத்தகைய சூழ்நிலையில் நாயக்கனேரி மலைக் கிராமத்தை சுற்றுலாத்தலமாக்கி அடிப்படை வசதிகளை செய்து கொடுத்தால் இப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் மேம்படும்.
சுற்றுலாத்தலமாக அறிவித்து, நாயக்கனேரி ஏரியில் படகு குழாம் அமைத்தும், போதிய கால இடைவெளியில் அரசுப் பேருந்து போக்குவரத்து வசதியும், பொழுது போக்கு இயற்கை பூங்காக்கள், சிறுவா் விளையாட்டு பூங்கா போன்றவற்றையும் அமைக்க வேண்டும். மேலும் வன உயிரின பூங்காவையும் ஏற்படுத்த வேண்டும்.
சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்தால் நாயக்கனேரி மலைக்கிராமம் புத்தெழுச்சி பெறும் என்கின்றனா் சமூக ஆா்வலா்கள்.
Image Caption
நாயக்கனேரி மலைக் கிராமத்தில் அமைந்துள்ள வற்றாத ஏரி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.