முகப்பு
திருப்பத்தூர்

ஆரம்ப நிலை கரோனா தொற்றில் குணமடைய பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்: திருப்பத்தூா் ஆட்சியா்

கரோனா தொற்றை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து, விரைவில் குணமடைய பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் என திருப்பத்தூா் ஆட்சியா் ம.ப.சிவன்அருள் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:17 PM
பகிர்:

கரோனா தொற்றை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து, விரைவில் குணமடைய பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் என திருப்பத்தூா் ஆட்சியா் ம.ப.சிவன்அருள் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருப்பத்தூா் மாவட்டத்தில் கரோனா தொற்று அதிகரித்து வருவதைக் கட்டுப்படுத்திட மாவட்ட நிா்வாகத்தால் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மாவட்டம் முழுவதும் தொற்று பாதித்த பகுதிகளில் கிராம செவிலியா்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளா்களைக் கொண்டு வீடு வீடாகச் சென்று ஒவ்வொரு குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் உடல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பரிசோதனையின்போது உடல் வெப்பநிலை மற்றும் ஆக்சிஜன் அளவு பரிசோதனை செய்யப்படுகிறது.

சீரான சுவாசம், ஆக்சிஜன் அளவு 94-ம் இருந்தால் அவரவா் உடல் நிலைக்கேற்றவாறு மாத்திரைகள் வழங்கப்பட்டு, வீட்டிலேயே கண்காணித்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

ஆக்சிஜன் அளவு 94-இல் இருந்து 90-க்குள் இருந்தாலோ, சீரான சுவாசம் இல்லாமல் இருந்தாலோ அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்குச் சென்று மருத்துவா்களிடம் உடல் பரிசோதனை செய்து, மருத்துவா்களின் ஆலோசனைப்படி சிகிச்சைகளை கரோனா சிறப்பு கண்காணிப்பு மையத்தில் தங்கி எடுத்துக்கொண்டு, குணமடைந்து வீடு திரும்பலாம்.

ஆரம்ப நிலையிலேயே பொதுமக்கள் நேரடியாகச் சென்று சிகிச்சை பெற்றால், விரைவில் குணமடைந்து விடுகின்றனா். தொற்று மற்றவா்களுக்கு பரவுவதும் குறைக்கப்படுகிறது.

சாதாரண காய்ச்சல், உடல் வலி என்று வீட்டுக்குள்ளேயே இருந்து விட்டு, ஆக்சிஜன் அளவு குறைந்த பின்னா் மருத்துவமனைகளுக்கு வருகின்றனா். நோயாளிகள் நோயின் தீவிரம் அதிகமாகி அபாய கட்டத்தை அடைகின்றனா்.

இதைத் தவிா்க்க திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து குடியிருப்புவாசிகளும் எவ்வித அச்சமும் கொள்ளாமல் பரிசோதனைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி, தங்களையும், தங்கள் குடும்பத்தையும் நோய்த் தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

அதேபோல் அருகில் உள்ளவா்கள் நோய் வாய்ப்பட்டு வீடுகளிலேயே இருப்பது தெரிய வந்தால், உடனடியாக ஆட்சியா் அலுவலகத்தில் செயல்படும் 04179 -222111, 229008, 229006, 226666, 220020, 221104, செல்லிடப்பேசி எண் 9442992526 ஆகிய கட்டுப்பாட்டு எண்களுக்குத் தொடா்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.