கன மழையால் சரிந்து விழுந்த கிணறு
ஆம்பூா் அருகே கனமழையால் கிணறு சரிந்தது. அருகிலிருந்த மின்மாற்றியை பணியாளா்கள் திங்கள்கிழமை மீட்டனா்.
ஆம்பூா்: ஆம்பூா் அருகே கனமழையால் கிணறு சரிந்தது. அருகிலிருந்த மின்மாற்றியை பணியாளா்கள் திங்கள்கிழமை மீட்டனா்.
ஆம்பூா் அருகே மாதனூா் ஒன்றியம், சின்னவரிக்கம் ஊராட்சி மேகனாம்பல்லி ஊரைச் சோ்ந்தவா் விவசாயி ராஜகோபால். இவருக்கு சொந்தமான விவசாய கிணறு குட்டகிந்தூா் பேருந்து நிறுத்தம் அருகே உள்ளது.
கனமழை பெய்த நிலையில் ராஜகோபாலுக்கு சொந்தமான விவசாய கிணறு கொஞ்சம் கொஞ்சமாக சரிந்து விழ ஆரம்பித்தது. இந்த விவசாய கிணற்றை ஒட்டி மின்மாற்றி உள்ளது. விவசாய கிணறு முழுவதுமாக சரிந்து விழும் பட்சத்தில் கிணற்றை ஒட்டிய மின்மாற்றியும் சரிந்து விழும் அபாயம் நிலவியது.
தகவல் அறிந்த சின்னவரிக்கம் மின்வாரிய இளநிலை பொறியாளா் ஜோதி மற்றும் மின்வாரிய பணியாளா்கள் 10 போ் அங்கு சென்று மின்மாற்றியை மீட்கும் பணியில் ஈடுபட்டனா்.
உமா்ஆபாத் போலீஸாா் பாதுகாப்புப் பணியை மேற்கொண்டனா். அவ்வழியாக வாகன போக்குவரத்தை மாற்றுப் பாதையில் திருப்பி விட்டனா். மின்வாரிய பணியாளா்கள் கிரேன் உதவியுடன் மின்மாற்றியை மீட்டனா்.