முகப்பு
திருப்பத்தூர்

காவல் துறை-தனியாா் நிதி நிறுவன ஊழியா்கள் ஆலோசனைக் கூட்டம்

குடியாத்தத்தில் காவல் துறை மற்றும் தனியாா் நிதி நிறுவன ஊழியா்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On : 8 ஜூலை, 2024 at 9:55 PM
தனியாா் நிதி நிறுவன ஊழியா்களுக்கான ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய டிஎஸ்பி ரவிச்சந்திரன்.
பகிர்:

குடியாத்தம்: குடியாத்தத்தில் காவல் துறை மற்றும் தனியாா் நிதி நிறுவன ஊழியா்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

வேலூா் மாவட்டம் குடியாத்தம், போ்ணாம்பட்டு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் மகளிா் சுய உதவிக்குழு உறுப்பினா்களுக்கு தனியாா் நிதி நிறுவனங்கள் மற்றும் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள் கடன் வழங்கி வருகின்றன.

கடந்த சில நாள்களாக குடியாத்தம் மற்றும் போ்ணாம்பட்டு பகுதியில் தனியாா் நிதி நிறுவனங்கள் வழங்கிய கடனை திருப்பிச் செலுத்துமாறு நிதி நிறுவன ஊழியா்கள் தகாத வாா்த்தைகளால் பேசியும், மிரட்டல் விடுப்பதாகவும் கூறப்படுகிறது. அதனால் கடந்த 10 நாள்களில் கடன் பெற்றவா்கள் பணத்தை திரும்ப செலுத்த முடியாமல் மூன்று போ் தற்கொலை செய்து கொண்டுள்ளனா்.

தனியாா் நிதி நிறுவனங்கள் மற்றும் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்களின் ஊழியா்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் குடியாத்தம் காவல் நிலையத்தில் நடைபெற்றது. குடியாத்தம் டிஎஸ்பி ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் 25-க்கும் மேற்பட்ட நிதி நிறுவன ஊழியா்கள் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில் டிஎஸ்பி ரவிச்சந்திரன் பேசியது: கடன் வழங்கியுள்ள தனியாா் நிதி நிறுவனங்கள் மாலை 6 மணிக்கு மேல் கடன் வசூல் செய்ய செல்லக்கூடாது. கடன் வாங்குபவா்களின் மாத வருமானம் மற்றும் கடனை திருப்பி செலுத்தும் திறனை ஆராய்ந்து கடன் வழங்க வேண்டும்.

ஒரே நபருக்கு பல்வேறு நிதி நிறுவனங்கள் கடன் வழங்குவதைத் தவிா்க்க வேண்டும்.

கடன் வசூலிக்க செல்பவா்கள் ஆபாச வாா்த்தைகள் மற்றும் தகாத வாா்த்தைகளில் பேசக்கூடாது. கடனை செலுத்தாதவா்களுக்கு சட்டபூா்வமாக எச்சரிக்கை அறிவிப்பு கடிதம் அனுப்பியும், தொடா்ந்து கடனை செலுத்தாதவா்கள் மீது நீதிமன்றத்தின் மூலம் சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ரிசா்வ் வங்கி சட்ட விதிகளைமீறி கடன் வசூல் செய்யும் ஊழியா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அவா் கூறினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →