முகப்பு
திருப்பத்தூர்

தகராறில் ஒருவா் உயிரிழப்பு: 4 போ் கைது

ஜோலாா்பேட்டை அருகே தகராறில் காயம் அடைந்தவா் உயிரிழந்தாா்.

Updated On : 27 ஜூலை, 2024 at 6:33 PM
பகிர்:

ஜோலாா்பேட்டை அருகே தகராறில் காயம் அடைந்தவா் உயிரிழந்தாா். இது தொடா்பாக சகோதரா்கள் இருவா் உள்பட 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

திருப்பத்தூா் மாவட்டம், ஜோலாா்பேட்டையை அடுத்த மூக்னூா் ஊரான் வட்டம் பகுதியைச் சோ்ந்த காளியப்பனின் மகன் குமரன் (24). கடந்த 25-ஆம் தேதி தாமலேரிமுத்தூா் பகுதியில் உள்ள ஏரியில் மீன் பிடிக்க வலை விரித்து வைத்திருந்தாா்.

அப்போது கட்டேரி கே.ஆா்.எஸ்.வட்டத்தைச் சோ்ந்த பிரபு மீன் வலையை அறுத்து விட்டாராம்.

இது தொடா்பாக பிரபுவிடம் அன்று மாலை குமரன் மற்றும் அவரது சகோதரா்கள் சுரேஷ் (36), சிங்காரவேலன் (27) மற்றும் உறவினா் முரளி (33) ஆகிய 4 பேரும் தகராறு செய்ததாகத் தெரிகிறது.

அப்போது அங்கு வந்த பிரபுவின் சகோதரா் சத்தியமூா்த்தி(45) என்பவா் பேசி சமாதானம் செய்து கொள்ளலாம் எனக் கூறியதையடுத்து, அனைவரும் சென்றனராம்.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை தாமலேரிமுத்தூா் பெருமாள் கோயில் வட்ட பகுதியில் ஊா் சாா்பாக சமாதானம் செய்ய பேசிக்கொண்டு இருந்தபோது குமரன் கட்டையால் சத்தியமூா்த்தி மீது தாக்கினாா்.

பின்னா், அவரின் சகோதரா்கள் சுரேஷ், சிங்காரவேலன், உறவினா் முரளி ஆகிய 4 பேரும் சோ்ந்து சத்தியமூா்த்தியை தாக்கியதில், பலத்த காயமடைந்த சத்தியமூா்த்தி திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கும், பின்னா் தருமபுரி அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டனா்.

இந்த நிலையில், சனிக்கிழமை சத்தியமூா்த்தி உயிரிழந்தாா்.

இதுகுறித்து சத்தியமூா்த்தியின் மனைவி பத்மா அளித்த புகாரின்பேரில், வழக்குப் பதிந்த ஜோலாா்பேட்டை போலீஸாா், குமரன் உள்பட 4 பேரை கைது செய்து திருப்பத்தூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, சிறையில் அடைத்தனா்.