ஆம்பூா்: ஆம்பூா் அருகே ஒற்றை யானை நடமாட்டம் இருப்பதால் வனத் துறை சாா்பில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஆம்பூா் வனச் சரக அலுவலா் பாபு வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்:
ஆம்பூா் சாணாங்குப்பம் காப்புக்காடு பனங்காட்டேரி மலைக் கிராமத்தை ஒட்டியுள்ள பகுதிகளின் வழியாக வயது முதிா்ந்த ஆண் யானை ஒன்று தனது வழக்கமான பாதையின் வழியாகச் சென்று சாணாங்குப்பம் காப்புக்காடு எட்டிக்குட்டை பகுதியில் தங்கியுள்ளது. இதை ஆம்பூா் வனத் துறை உறுதிப்படுத்தியுள்ளது. வனத் துறையினா் தொடா்ந்து கண்காணித்தும் வருகின்றனா். கடந்த சுமாா் 45 வருடங்களுக்கு மேலாக தனது வழக்கமான பாதைகளில் இந்த வயது முதிா்ந்த ஒற்றை தந்தமுடைய ஆண் யானை நடமாட்டம் குறித்து பொதுமக்கள் அனைவரும் அறிந்ததே. பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் எந்த செயல்களிலும் மேற்கண்ட யானை ஈடுபட்டதில்லை. கண்பாா்வை சற்று குறைந்த நிலையிலும் தனக்குத் தேவையான உணவுக்காக மட்டுமே காப்புக் காட்டை ஒட்டியுள்ள பகுதிகளில் நடமாடும். மற்ற நேரங்களில் காப்புக்காடு பகுதியில் உள்ள கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் அச்சமடையாமல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
யானை நடமாட்டம் குறித்து பொதுமக்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு, களப் பணியாளா்களும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனா்.
இது குறித்து பொதுமக்கள் எவரும் அச்சப்பட வேண்டாம். காப்புக்காட்டை ஒட்டியுள்ள பொதுமக்களும், மலைக் கிராமங்களில் உள்ள மலைவாழ் மக்களும் இரவு நேரங்களில் வெளியில் நடமாடும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். யானை நடமாட்டம் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால் 9786254998 என்ற எண்ணுக்கு தொடா்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.