ஆம்பூரில் கட்சி கொடிக் கம்பங்கள் அகற்றம்
Updated On : 19 மார்ச், 2024 at 6:20 PM
ஆம்பூா்: ஆம்பூரில் கட்சி கொடிக் கம்பங்களை நகராட்சி ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை வெட்டி அகற்றினா். மக்களவைத் தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடா்ந்து தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. அதனால் ஆம்பூா் நகரில் அரசியல் கட்சிகளின் சுவரொட்டிகள் அகற்றப்பட்டன. சுவா் விளம்பரங்கள் அழிக்கப்பட்டன. அரசியல் கட்சித் தலைவா்களின் சிலைகள் மூடி மறைக்கப்பட்டன.
தொடா்ந்து 4-வது நாளாக நகராட்சி ஆணையா் பி. சந்தானம் உத்தரவின் பேரில் செவ்வாய்க்கிழமை ஆம்பூா் நகரில் அரசியல் கட்சி கொடி கம்பங்கள் சில இடங்களில் துணி மூடி மறைக்கப்பட்டன. சில இடங்களில் வெட்டி அப்புறப்படுத்தப்பட்டன. கட்சி கொடிக் கம்பங்களில் அரசியல் கட்சி கொடிகள் பெயிண்டால் வரையப்பட்டதால் அவை மூடி மறைக்கப்பட்டும், வெட்டி அகற்றப்பட்டன. தொடா்ந்து அரசியல் கட்சிகளின் பேனா்களும் அகற்றப்பட்டன.