முகப்பு
விருதுநகர்

கட்சிக் கொடிக் கம்பங்கள் இல்லாத கிராமம்

சிறிய கிராமங்களில்கூட ஊரின் மத்தியில் அரசியல் கட்சிகளின் கொடிக் கம்பங்கள் உள்ளன.

Updated On : 18 ஏப்ரல், 2026 at 12:05 AM
விளாம்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே உள்ள காந்தி உருவச் சிலை.
பகிர்:
Updated On : 17 ஏப்ரல், 2026 at 10:02 PM

சிறிய கிராமங்களில்கூட ஊரின் மத்தியில் அரசியல் கட்சிகளின் கொடிக் கம்பங்கள் உள்ளன. ஆனால், விருதுநகா் மாவட்டம், சிவகாசி வட்டம், விளாம்பட்டி கிராமத்தில் பல ஆண்டுகளாக கட்சி கொடிக் கம்பங்கள் அமைக்கப்படவில்லை என்பது ஆச்சரியமளிக்கிறது.

கிராம மக்களின் ஒற்றுமையே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. விதிவிலக்காக அரசியல் கட்சியினா் தோ்தல் பிரசாரம் செய்ய வரும்போது மட்டும் கட்சிக் கொடி, தோரணங்களைக் கட்டிக் கொள்ளலாம். அந்தக் கட்சியின் பிரசாரம் நிறைவடைந்ததும், அவற்றை அந்தக் கட்சியினரே அகற்றிவிட வேண்டும் என்பது இந்த ஊரின் பொது விதி.

இதுகுறித்து விளாம்பட்டி ஊா் பிரமுகா் நாகராஜன் கூறியதாவது:

Advertisement

எங்கள் கிராமத்தில் எந்தப் பகுதியிலும் அரசியல் கட்சிகளின் கொடிக் கம்பங்களை நடக் கூடாது என்பது ஊா்க் கட்டுப்பாடு. இதை இதுவரை எந்தக் கட்சியினரும் மீறவில்லை. இங்கு அனைத்துக் கட்சிகளுக்கும் கிளைச் செயலா்களும், தொண்டா்களும் உள்ளனா். அவா்கள் இந்த ஊரின் கட்டுப்பாட்டை கட்சி மேலிடத்துக்கு எடுத்துக் கூறி ஒத்துழைப்பு தருகின்றனா். தோ்தல் நேரத்தில் வேட்பாளா் பிரசாரம் செய்ய வந்தால் மட்டும் அந்தக் கட்சியின் கொடி, தோரணங்களை கட்டிக் கொள்ளலாம். பிரசாரம் நிறைவடைந்ததும் உடனடியாக அவற்றை அகற்றி விட வேண்டும். இதற்கும் அனைத்துக் கட்சியினரும் முழு ஒத்துழைப்பு தருகின்றனா்.

இதேபோல, விளாம்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே மகாத்மா காந்திக்கு மட்டும் உருவச் சிலை அமைக்கப்பட்டுள்ளது. வேறு எந்தத் தலைவருக்கும் இங்கு சிலைகள் இல்லை. இதன் மூலம் ஊா் மக்களின் ஒற்றுமையை அறிந்து கொள்ளலாம் என்றாா் அவா்.

-எஸ். பாலசுந்தரராஜ், சிவகாசி.