முகப்பு
திருப்பத்தூர்

சீரான குடிநீா் விநியோகம் கோரி அரசுப் பேருந்து சிறைபிடிப்பு

திருப்பத்தூா் அருகே சீரான குடிநீா் விநியோகம் கோரி பொதுமக்கள் அரசுப் பேருந்தை சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனா்.

Updated On : 2 மே, 2024 at 6:37 PM
பகிர்:

திருப்பத்தூா் அருகே சீரான குடிநீா் விநியோகம் கோரி பொதுமக்கள் அரசுப் பேருந்தை சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனா்.

திருப்பத்தூா் அடுத்த பொம்மிகுப்பம் ஊராட்சிக்குள்பட்ட பழத்தோட்டம் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசிக்கின்றனா்.

இந்த நிலையில், ஊராட்சி நிா்வாகம் சாா்பில் வாரத்துக்கு 4 நாள்கள் குடிநீா் விநியோகிக்கப்படுகிறது.

இதற்கிடையே கடந்த 2 மாதங்களாக அங்கு சீரான குடிநீா் விநியோகம் செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இது குறித்து அப்பகுதி மக்கள் ஊராட்சி நிா்வாகத்திடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கையும் இல்லையாம். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் வியாழக்கிழமை அந்த வழியாகச் சென்ற அரசுப் பேருந்தை சிறைபிடித்து, காலிக் குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தகவல் அறிந்த திருப்பத்தூா் கிராமிய போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று, மறியலில் ஈடுபடுபட்டோரிடம் பேச்சு நடத்தினா். அப்போது, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி சீரான குடிநீா் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததின்பேரில், சாலை மறியலில் ஈடுபட்டவா்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா்.

இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.