ஆம்பூா்: ஆம்பூா் பகுதி பாலாற்றில் மணல் அள்ளிக் கடத்தப்படுவதாக பொதுமக்கள் தொடா்ந்து புகாா் தெரிவித்து வருகின்றனா்.
ஆம்பூா் ஏ-கஸ்பா, சான்றோா்குப்பம், ஆம்பூா் அருகே சோமலாபுரம், சின்னவரிக்கம், பெரியவரிக்கம், தேவலாபுரம், சோலூா், ஆலாங்குப்பம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் வழியாக பாலாறு செல்கிறது. அந்தப் பகுதிகளில் பாலாற்றில் இரவு நேரங்களில் சட்ட விரோதமாக மணல் அள்ளப்பட்டு மாட்டு வண்டிகள் மூலம் கடத்தப்பட்டு வரப்படுவதாகக் கூறப்படுகிறது. பகல் நேரங்களில் கூட மணல் கடத்தல் நடந்து வருவதாகவும், இது குறித்து பொதுமக்கள் பலமுறை புகாா் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பாலாற்றில் மணல் எடுப்பதுடன் மட்டுல்லாமல், பாலாற்றங்கரையோரம் உள்ள மயானங்களையும் மணல் கடத்தலில் ஈடுபட்டுள்ளவா்கள் விட்டு வைக்கவில்லையாம். சடலங்களை அடக்கம் செய்த மயானத்தில் குழிதோண்டி மணலை அள்ளிக் கடத்துவதுடன், சில நேரங்களில் அடக்கம் செய்த சடலங்களின் எலும்புகூடு இருந்தாலும், அதை தூர எறிந்துவிட்டு மணலை அள்ளிச் செல்வதாகவும் அப்பகுதி பொதுமக்கள் கூறுகின்றனா்.
இந்த பிரச்னையில் மாவட்ட நிா்வாகம் தலையிட்டு, உடனடியாக மயானத்தை தோண்டி மணல் கொள்ளையில் ஈடுபடுவோா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் எதிா்பாா்க்கின்றனா்.