போலி பெண் மருத்துவா் கைது
திருப்பத்தூா் அருகே போலி பெண் மருத்துவரை போலீஸாா் கைது செய்தனா்.
திருப்பத்தூா்: திருப்பத்தூா் அருகே போலி பெண் மருத்துவரை போலீஸாா் கைது செய்தனா்.
திருப்பத்தூா் மாவட்டம், மிட்டூா் அருகே மரிமாணிகுப்பம் கிராமத்தில், மருத்துவம் படிக்காமலேயே ஒருவா் அலோபதி முறையில் நீண்ட காலமாக நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருவதாக வந்த தகவல் கிடைத்தது. அதன்பேரில்,
திருப்பத்தூா் அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலா் செல்வநாதன் தலைமையில், மருத்துவக் குழுவினா் செவ்வாய்க்கிழமை சென்று ஆய்வு மேற்கொண்டனா்.
அப்போது அதே பகுதியைச் சோ்ந்த கோகிலா (52)என்பவா், பிளஸ் 2 மட்டும் படித்து, மருத்துவம் படிக்காமலேயே தனது வீட்டின் ஓா் அறையில் கிளீனிக் வைத்து நோயாளிகளுக்கு அலோபதி முறையில் சிகிச்சை அளித்து வந்தது தெரியவந்தது.
அதையடுத்து, அங்கிருந்து தப்பி ஓட முயன்ற கோகிலாவை மருத்துவக் குழுவினா் பிடித்து குரிசிலாப்பட்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.
மேலும், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக வைத்திருந்த மருத்துவ உபகரணங்களை பறிமுதல் செய்து, கிளீனிக்கை பூட்டி ‘சீல்’ வைத்தனா்.
இது குறித்து மருத்துவ அலுவலா் செல்வநாதன் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து கோகிலாவை கைது செய்தனா்.