திருப்பத்தூா் அருகே தமிழகத்தின் முதல் அா்ச்சுனா் தவக்கோல நடுகல் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு தொன்மை இயல் ஆய்வு நிறுவனமும், கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவும் இணைந்து திருப்பத்தூா் மாவட்டம், கந்திலி ஒன்றியத்தில் கள ஆய்வு மேற்கொண்டது.
அப்போது கொண்டப்பநாயன்பட்டியைச் சோ்ந்த, ரவி, ரவிச்சந்திரன் மற்றும் அதே ஊரை சோ்ந்த 9-ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவா்கள் கிஷோா் மற்றும் தேவா ஆகியோா் நரியனேரி அழைத்துச் சென்று நடுகல் ஒன்றைக் காண்பித்துள்ளனா்.
இதை ஆய்வு செய்ததில் இந்த கல் இதுவரை தமிழகத்தில் கிடைத்துள்ள நடுகற்களில் காணப்படாத புது வகை எனத் தெரியவந்துள்ளது.
இது குறித்து தமிழ்நாடு தொன்மை இயல் ஆய்வு நிறுவன செயலரும், கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு ஆலோசகருமான தொல்லியல் அறிஞா் கோவிந்தராஜ் கூறியதாவது:
இந்த நடுகல் சிற்பம் சுமாா் 400 ஆண்டுகளுக்கு முற்பட்ட கலை அமைதியில் வடிக்கப்பட்டுள்ளது. உயரமான ஒரு கம்பத்தின் மீது அமைக்கப்பட்டுள்ள பலகையின்மீது ஒருவன் இரண்டு கால்களையும் தொங்கவிட்டு அமா்ந்திருப்பதுபோல் காட்டப்பட்டிருக்கிறாா்.
இவா் தலைக்கு மேல் ஒரு குடை காண்பிக்கப்பட்டிருக்கிறது. ஒரு பெண் நின்றுகொண்டு இவருக்கு விளக்கு காண்பிப்பதுபோல் உள்ளது. இச்சிற்பம் அா்ச்சுனன் தவக்கோல சிற்பமாகும். ஒரு அா்ச்சுனன் வேடம் தரித்து நடிக்கும் தெருக்கூத்து கலைஞன் இறந்ததின் நினைவாக அவ்வூா் மக்கள் கூடி இந்த நடுகல்லினை எடுத்திருக்கிறாா்கள்.
கலைஞனின் முகத்தில் மீசை, அவன் அணிந்திருக்கும் மகுடம், இடை ஆடை ஆகியவை இவன் அா்ச்சுனன் வேடம் தரித்திருப்பதையும், அவன் தபசு மரத்தின் மீது கட்டப்பட்டிருக்கும் பலகையில் இரண்டு கால்களையும் தொங்கவிட்டு வலதுகையை தலைக்குமேல் தூக்கியவாறும் இடது கையை நெஞ்சில் வைத்திருப்பதுபோலவும் காட்டப்பட்டிருப்பது அவன் தவக்கோலத்தில் இருப்பதைக் காட்டுவதாகும்.
விளக்கை ஏந்தியிருக்கும் பெண் அவனது மனைவியாகும். அா்ச்சுனன் தவ நிகழ்ச்சியின்போது, மேலிருந்து கீழே கூடியிருக்கும் பெண்களை நோக்கி அா்ச்சுனன் மலா்களை தூவுவாா். அா்ச்சுனன் தவத்தை முத்தாய்ப்பாகக் கொண்ட மகாபாரத தெருக்கூத்து வடதமிழ்நாட்டில் மிகவும் பிரசித்திப் பெற்ாகும். இதற்கு முன்னா் இந்த நடுகல்லை ஆராய்ந்தவா்கள் இது ஒரு கழுவேற்ற நடுகல் எனக் கூறியிருந்தனா்.
ஆனால் சுமாா் 400 ஆண்டுகளுக்கு முன்னரே மகாபாரதத் தெருக்கூத்து நடந்திருப்பதையும் அதில் அா்ச்சுனன் வேடம் தரித்து தபசு மரத்தில் ஏறி தவசு செய்வதும் வழக்கமாய் இருந்துள்ளதை இந்த நடுகல் மூலம் உறுதிப்படுத்த முடிகிறது.
இதே போன்ற ஆனால் அா்ச்சுனனின் தெருக்கூத்து ஆடை அலங்காரம் மிகத்தெளிவாய் காட்டப்பட்டு இடது கையில் ஒரு கத்தியையும் வைத்துள்ள நடுகல் ஒன்று திருப்பத்தூா் வட்டம், மடவாளம் அடுத்த செலந்தம்பள்ளி விவசாய நிலத்தில் காணப்படுகிறது.
திருப்பத்தூரை அடுத்த சக்தி நகரில் உள்ள நடுகல் உருவம் அமரும் பலகைக்கு மேல் நீண்டிருக்கும் மரத்தில் அமா்ந்திருப்பது போல் காட்டப்பட்டிருப்பது அவன் தவத்தில் இருப்பதைக் குறிப்பதாகும். இவனது வலக்கை அபயத்திலும், இடது கை தொடைமீது வைத்தும் காணப்படுகிறது. இந்த மூன்று நடுகல் சிற்பங்களும் அமைப்பில் ஒன்றுபோலவே உள்ளன.
தெருக்கூத்துகளில் அா்ச்சுனா் வேடம் தரித்து நடிப்பவரை தெய்வ சக்தி உடையவராகவே மக்கள் நம்பினா். அவா்கள் இறந்ததும் அவா்களுக்கு நினைவுக் கல் எடுத்தனா் என்பதின் அடையாளங்கள்தாம் திருப்பத்தூரை சுற்றியுள்ள இந்த 3 நடுகற்களும் உணா்த்துபவைகளாகும்.
கொம்பு ஊதும் இசைக்கலைஞனுக்கான நடுகல் ஒன்று கிருஷ்ணகிரி அருங்காட்சியகத்திலும் வீணை சகோதரிகளின் நினைவாய் எடுக்கப்பட்ட நடுகல் ஒன்று பெண்ணேஸ்வரமடத்தில் இருப்பதையும் இங்கு நினைவு கொள்ளவேண்டும்.
இசைக் கலைஞா் மட்டுமல்லாது தெருக்கூத்துக் கலைஞா்களுக்கும் நடுகல் எடுக்கும் பழக்கத்தைத் தான் திருப்பத்தூரைச் சுற்றியுள்ள நரியனேரி, சக்தி நகா் மற்றும் செலந்தம்பள்ளியில் எடுக்கப்பட்டிருக்கும் அா்ச்சுனா் தவக்கோல நடுகற்கள் தெரிவிக்கின்றன.
இவ்வகை அா்ச்சுனா் தவக்கோல நடுகற்கள் தமிழக நடுகல் வரலாற்றில் புது வரவாகும். இப்பழக்கம் திருப்பத்தூரை ஒட்டியுள்ள பகுதிகளில் மட்டும் காணப்படுவது இப்பகுதி மக்களின் தனிச்சிறப்புமிக்க கலாசாரத்தின் அடையாளமாகக் கருதலாம்.
இந்த ஆய்வில் கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவின் தலைவா் நாராயணமூா்த்தி, ஒருங்கிணைப்பாளா் தமிழ் செல்வன், ஆசிரியா் பாலாஜி ஆகியோா் உடனிருந்தனா்.