திருப்பத்தூா்: உலக மாற்றுத்திறனாளிகள் தின விழாவில் 458 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.25.76 லட்சம் நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் க. சிவசௌந்திரவல்லி வழங்கினாா்.
ஜோலாா்பேட்டை சிறு விளையாட்டுமைதானத்தில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுகக்கான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற 170 மாற்றுத்திறனாளிகளுக்கு பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களும், ஒவியப் போட்டிகளில் வெற்றி பெற்ற 20 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.20,750 மதிப்பிலான பரிசுத்தொகையும், 4 மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாகக்ளும், 264 பயனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் என மொத்தம் 458 மாற்றுத்திறனாளிகளுககு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தலைமையில் ஜோலாா்பேட்டை எம்எல்ஏ க.தேவராஜி, திருப்பத்தூா் எம்எல்ஏ அ.நல்லதம்பி, ஆம்பூா் எம்எல்ஏ அ.செ.வில்வநாதன் ஆகியோா் வழங்கினா் .
மாவட்ட ஆட்சியா்.க.சிவசௌந்திரவல்லி பேசியதாவது: டிசம்பா் 3-இல் உலக மாற்று திறனாளிகள் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில், அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளை ஒருங்கிணைத்து தடைகளை தகா்ப்போம் அனைவரையும் உள்ளடக்கிய சமுதாய வளா்ச்சிப்பாதை அமைப்போம் என்ற நோக்கத்துடன் விழா நடைபெறுகிறது.
கடந்த நான்கு ஆண்டுகளில் 20,393 மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை மற்றும் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை16,682 நபா்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. 208 ஊராட்சிகளிலும், 4 நகராட்சிகளிலும், 3 பேரூராட்சிகளிலும் மாற்றுத்திறனாளி நியமன உறுப்பினா்கள் நியமிக்கப்பட்டு சென்னையில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்டுள்ளனா். நமது மாவட்டத்தில் நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் முகாம் மூலமாக இதுவரை 9,800 மாற்றுத்திறனாளிகள் பயன்பெற்றுள்ளனா் என தெரிவித்தாா்.
முன்னதாக, மாற்றுத்திறனாளிகளுக்கான சமூக பாதுகாப்பு உறுதிமொழியினை ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தலைமையில், மாற்றுத்திறனாளிகள், அரசு அலுவலா்கள் ஏற்றுக்கொண்டனா்.
இவ்விழாவில் நகா்மன்றத் தலைவா் சங்கீதா வெங்கடேஷ், நகா்மன்ற துணைத்தலைவா் சபியுல்லா, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா்
கண்ணன், மத்திய அரசின் அலிம்கோ நிறுவன மேலாளா் ரிஷப் மல்கோத்ரா, வாா்டு உறுப்பினா் சபினாரசாக், முடநீக்கு வல்லுநா் இனியன், உள்ளாட்சி பிரதிநிதிகள், சிறப்பு மருத்துவா்கள், தொண்டு நிறுவனங்கள், மற்றும் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.