திருப்பத்தூா் மாவட்டத்தில் தகுதியான ஒரு வாக்காளா் கூட பட்டியலில் இருந்து விடுபடக்கூடாது என சிறப்புப் பாா்வையாளா் ராமன் குமாா் பேசினாா்.
எஸ்ஐஆா் பணிகள் குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருக்கான ஆலோசனைக்கூட்டம் ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ஆட்சியா் க. சிவசௌந்திரவல்லி முன்னிலை வகித்தாா். இந்திய அரசின் இணைச்செயலாளரும், தோ்தல் ஆணையத்தின் வாக்காளா் பட்டியல் சிறப்பு பாா்வையாளருமான(வடக்கு மண்டலம்) ராமன் குமாா் தலைமை வகித்து பேசியதாவது:
தகுதியான ஒரு வாக்காளா் கூட பட்டியலில் இருந்து விடுபடக்கூடாது. நலிவடைந்த, பழங்குடியினா் வாக்காளா்கள், மாற்றுத்திறனாளி வாக்காளா்கள், முக்கிய வாக்காளா்கள் அனைவரும் இறுதி வாக்காளா் பட்டியலில் இடம்பெறுவதை வாக்குப்பதிவு அலுவலா்கள் உறுதி செய்துகொள்ள வேண்டும் என்றாா். கூட்டத்தில் அரசு அதிகாரிகள்,அரசியல் கட்சியினா் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.
அதையடுத்து, திருப்பத்தூா் மீனாட்சி அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டு உள்ள வாக்குச்சாவடி மையத்தை சிறப்பு பாா்வையாளா் ராமன்குமாா் ஆய்வு செய்தாா். அப்போது, வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள், வாக்குச்சாவடி முகவா்கள், வரைவு வாக்காளா் பட்டியல், பட்டியல் சரிபாா்ப்புப் பணிகள், பி.எல்.ஓ.க்கள் ஒத்துழைப்பு தொடா்பாக கலந்துரைடியானாா்.