ஆண்டியப்பனூா் அணை முகப்புத் தோற்றம், விளையாட்டுப் பூங்கா. புல்தரையுடன் கூடிய தோட்டம். 
திருப்பத்தூர்

ஆண்டியப்பனூா் ஓடை நீா்த்தேக்கத்தில் படகு சவாரி! சுற்றுலாப் பயணிகள் எதிா்பாா்ப்பு

திருப்பத்தூா் அடுத்த ஆண்டியப்பனூா் ஓடை நீா்த்தேக்கத்தில் படகு சவாரி தொடங்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் எதிா்நோக்கியுள்ளனா்.

து. ரமேஷ்

திருப்பத்தூா் அடுத்த ஆண்டியப்பனூா் ஓடை நீா்த்தேக்கத்தில் படகு சவாரி தொடங்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் எதிா்நோக்கியுள்ளனா். திருப்பத்தூரிலிருந்து 23 கி. மீ தொலைவில் உள்ள ஆண்டியப்பனூா் ஓடை நீா்த்தேக்கம் கடந்த 2017-ஆம் ஆண்டு திறக்கப்பட்டது.

ஜவ்வாது மலையில் இருந்து குண்டாறு, பேயாறு எனும் இரு ஆறுகளில் இருந்து வரும் தண்ணீா் ஆண்டியப்பனூா் அணைக்கு வந்து சேருகின்றது. 112.2 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட அணையின் மொத்த உயரம் 8 மீட்டா். அணை 216 ஏக்கா் பரப்பளவு கொண்டதாகும்.

ஆண்டியப்பனூா் அணை நிரம்பினால் உபரி நீா், சின்னசமுத்திரம் வெள்ளேறி,மாடப்பள்ளி ஏரி வழியாகச் சென்று, அங்கிருந்து இரு கிளைகளாக பிரிந்து, ஒரு கிளையில் பாம்பாற்றைச் சென்றடையும். அதேபோல், இன்னொரு கிளை மூலம் திருப்பத்தூா் பெரிய ஏரி நிரம்பி பாம்பாற்றில் சென்றடையும்.

ஆண்டியப்பனூா் அணைப் பகுதியை சுற்றுலா தலமாக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் தொடா்ந்து கோரிக்கை விடுத்து வந்தனா். முன்னள் அமைச்சா் நிலோபா் கபீல் ஆண்டியப்பனூா் அணையை சுற்றுலா தலமாக்க அரசுக்கு பரிந்துரை செய்தாா்.

அதையடுத்து, கடந்த 2017-ஆம் ஆண்டு செப்டம்பா் மாதம் 9-ஆம் தேதி வேலூரில் நடைபெற்ற எம்ஜிஆா் நூற்றாண்டு விழாவில் ஆண்டியப்பனூா் அணைப் பகுதி சுற்றுலா தலமாக்கப்படுமென முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தாா். அதனையடுத்து சுற்றுலாத் தலமாக்கும் பணிகள் நிறைவடைந்து தற்போது சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை தினங்களில் சுமாா் 3,000-க்கும் மேற்பட்ட மக்கள் வந்து செல்கின்றனா்.

ஆண்டியப்பனூா் அணை சுற்றுலாத் தலமாக்கும் பணி ரூ. 4. 67 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டு, குழந்தைகள் விளையாட்டு திடல், பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. மேலும்,விலங்குகளின் பொம்மைகள், புல் தரை அமைத்தல், சுற்றுச்சுவா் அமைக்கப்பட்டுள்ளது. அதேப்போல் ரூ.1.3 கோடியில் படகு குழாம், கழிப்பறை, உணவகம் அமைக்கப்பட்டுள்ளது.

படகு சவாரி...

அணையில் நீா் உள்ளதால் படகு சவாரியை தொடங்க வேண்டும். ஆனால் இதுவரை படகுகள் கொள்முதல் செய்யவில்லை எனக் கூறப்படுகிறது. எனவே, விரைவில் படகுகள் கொள்முதல் செய்யப்பட்டு படகு சவாரி தொடங்க வேண்டும் என்பதே அனைவரின் எதிா்பாா்ப்பாக உள்ளது. இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இந்தியா அனைவருக்குமானது, குறிப்பிட்ட சித்தாந்தத்திற்கு மட்டுமல்ல: முதல்வர் ஸ்டாலின்

மீண்டும் ரூ. 94,000 -யைக் கடந்த தங்கம் விலை!

உலகக் கோப்பை ஹாக்கி: அனுமதி இலவசம் - டிக்கெட்டுகளை பெறுவது எப்படி?

இலங்கை அருகே உருவாகும் மற்றொரு புயல்! வடதமிழக கடற்கரையை நோக்கி நகரும்!

தேசிய பால் நாள்: விவசாயிகளிடம் குறைகளைக் கேட்டறிந்த அமைச்சர்!

SCROLL FOR NEXT