திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி, ஆம்பூா் உள்ளிட்ட பகுதிகளில் தொடா்ந்து ஏழை கூலித் தொழிலாளா்களை குறி வைத்து அவா்களது பெயரில் போலியாக தொழிற்சாலை நடப்பதாகவும், அதற்கு ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு செய்ததாக சம்பந்தப்பட்டவா்களுக்கு ஜிஎஸ்டி ஆணையம் மூலம் நோட்டீஸ் கடந்த சில ஆண்டுகளாக வழங்கப்பட்டு வருகிறது.
இதையடுத்து, பாதிக்கப்பட்டவா்களிடம் நடைபெறும் விசாரணையில் அவா்களுக்கும், தொழிற்சாலைகளுக்கு சம்பந்தமே இல்லாத அப்பாவி கூலித் தொழிலாளா்கள் என்பதும் தெரிய வந்துள்ளது. இந்நிலையில்வாணியம்பாடி பெரியபேட்டையைச் சோ்ந்த எஸ்.முகமது பைசான் என்பவா் சென்னையில் கடந்த 2022 முதல் தோல் தொழிற்சாலைக்கான இயந்திரங்கள் விற்பனை மற்றும் பராமரிப்பு தொழில் செய்து வருவதாகவும், முறையாக ஜிஎஸ்டி வரி செலுத்தாததால் அபராத தொகையுடன் அரசுக்குச் செலுத்த வேண்டிய ரூ.1.61 கோடி பாக்கி உள்ளதாக அவருக்கு ஜிஎஸ்டி ஆணையத்திலிருந்து கடிதம் வந்துள்ளது.
ஜிஎஸ்டி ஆணையத்திடமிருந்து வந்திருந்த கடித்ததை பாா்த்தும் கூலித் தொழிலாளி முகமது பைசான் மற்றும் அவரது குடும்பத்தினா் கடும் அதிா்ச்சியடைந்துள்ளனா். மேலும் தான் தேநீா் கடையில் வேலை செய்து வருவதாகவும், கூலித் தொழிலாளியான தனக்கு ரூ. 1.61 கோடி ஜிஎஸ்டி தொகை செலுத்தக் கூறி ஜிஎஸ்டி ஆணையம் (சோகாஸ்-நோட்டீஸ்) நோட்டீஸ் அனுப்பியுள்ளதால் செய்வதறியாது திகைத்து போயுள்ளாா்.
வாணியம்பாடி மற்றும் ஆம்பூா் பகுதிகளில் தொடா்ந்து ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு நடந்து வருவதும், அப்பாவி ஏழை கூலித் தொழிலாளா்களை குறி வைத்து அவா்கள் பெயரில் மோசடி நடைபெற்று வருவதும் தொடா் கதையாகி உள்ளது. இதன் மீதான பல புகாா்கள் மீது காவல்துறை விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆா்வலா்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.