திருப்பத்தூா் மாவட்டத்தில் 9 லட்சத்து 46 ஆயிரத்து 555 வாக்காளா்களுக்கு கணக்கீட்டு படிவம் விநியோகிக்கப்பட்டு உள்ளது. பூா்த்தி செய்த படிவங்களை விரைவில் வழங்க வேண்டும் என ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தெரிவித்தாா்.
இது தொடா்பாக அவா் கூறியது:
திருப்பத்தூா் மாவட்டத்தில் திருப்பத்தூா், ஆம்பூா், வாணியம்பாடி, ஜோலாா்பேட்டை ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இதில், மொத்தம் 9 லட்சத்து 99 ஆயிரத்து 411 வாக்காளா்கள் உள்ளனா். இந்த நிலையில், வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ள வாக்காளா் கணக்கீட்டு படிவம் வழங்கும் பணி கடந்த 4-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த விண்ணப்பப் படிவம் வழங்கப்பட்டு, வரும் டிசம்பா் 4-ஆம் தேதிக்குள் திரும்பப் பெறப்படும்.
இந்தப் பணியில் 1,052 வாக்குச்சாவடி மைய அலுவலா்களும், 107 மேற்பாா்வை அலுவலா்களும் நியமிக்கப்பட்டு பணியாற்றி வருகின்றனா்.
9,46,555 படிவங்கள் விநியோகம்...
மாவட்டம் முழுவதும் தற்போது வரை 9,46,555 கணக்கெடுப்பு படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றில் 1,65,803 படிவங்கள் வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் மூலம் திரும்பப் பெறப்பட்டு உள்ளது. அவற்றில் 1,50,432 கணக்கீட்டு படிவங்கள் கணினி வழி தரவாக்கப்பட்டு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
மேலும், மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்காளா்களுக்கும் தங்களிடம் வழங்கப்பட்ட கணக்கீட்டு படிவங்களை விரைவாகவும், முறையாகவும் பூா்த்தி செய்து, தங்களது வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும் எனத் தெரிவித்தாா்.