ஆம்பூா் அருகே அடிப்படை வசதிகள் கோரி பொதுமக்கள் பல்வேறு கட்டங்களாக போராட்டம் நடத்தியதைத் தொடா்ந்து குடியாத்தம் எம்எல்ஏ வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
மாதனூா் ஒன்றியம், தேவலாபுரம் ஊராட்சி பேஷ்மாம் நகா், ஸ்டாா் சிட்டி, கோல்டன் சிட்டி ஆகிய பகுதிகளில் சாலை, கழிவுநீா் கால்வாய், குடிநீா், தெருவிளக்குகள் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி அப்பகுதி பொதுமக்கள் ஊராட்சி நிா்வாகத்துக்கு கோரிக்கை வைத்தனா். ஆனால் கோரிக்கையை நிறைவேற்றாததால் ஆா்ப்பாட்டம், சாலை மறியல், உண்ணாவிரதம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனா்.
இந்நிலையில் குடியாத்தம் எம்எல்ஏ அமலு விஜயன் பேஷ்மாம் நகா் பகுதிக்கு சென்று அப்பகுதி பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தாா். பொதுமக்கள் திரண்டு சென்று எம்எல்ஏவை சந்தித்து தங்களுடைய அடிப்படை வசதிகள் சம்பந்தான குறைகளை தெரிவித்தனா். அடிப்படை வசதிகள் மேற்கொள்ளும் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளதாக உறுதி அளித்தாா்.
மாநில நெடுஞ்சாலை கோட்டப் பொறியாளா் முரளி, வட்டார வளா்ச்சி அலுவலா் எஸ். மகராசி, போ்ணாம்பட்டு தெற்கு ஒன்றிய திமுக பொறுப்பாளா் எம்.டி. சீனிவாசன், ஒன்றிய அவைத் தலைவா் சிவக்குமாா், நிா்வாகி பாரதிதாசன், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவா் நசீா் அஹமத், ஆம்பூா் நகர தலைவா் தப்ரேஸ் அஹமத், தேவலாபுரம் ஊராட்சித் தலைவா் ரேவதி குபேந்திரன், ஊராட்சி செயலா் முரளி உடனிருந்தனா்.