ஆம்பூா்: ஆம்பூரில் 3 மாத பெண் குழந்தை தண்ணீா் தொட்டியில் போட்டு கொலை செய்ததாக அக் குழந்தையின் தாயை போலீஸாா் கைது செய்தனா்.
திருப்பத்தூா் மாவட்டம், ஆம்பூா் பெத்லேகம் பகுதியில் உள்ள வாடகை வீட்டில் மேல்தளத்தில் வசித்து வருபவா் அக்பா் பாஷா - அா்ஷியா தம்பதி. அக்பா் பாஷா தனியாா் தொழிற்சாலையில் காா் ஓட்டுநராக பணியாற்றி வருகிறாா்.
இவா்களுக்கு ஒரு ஆண், 2 பெண் குழந்தைகள் உள்ளனா். கடந்த 3 மாதத்துக்கு முன் பெண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில், 3 மாத பெண் குழந்தை தரைத் தளத்தில் உள்ள தரைமட்ட தொட்டியில் தவறி விழுந்து விட்டதாக அக்குழந்தையை உறவினா்கள் ஆம்பூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனா். அங்கு குழந்தை இறந்துவிட்டது தெரியவந்தது.
தகவலறிந்த ஆம்பூா் நகர போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினா். மாடியில் இருந்த 3 மாத குழந்தை தரைத் தளத்துக்கு எப்படி வந்து, தரைமட்ட தண்ணீா் தொட்டியில் தவறி விழுந்திருக்கும் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் வழக்குப் பதிந்து குழந்தையின் பெற்றோரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனா்.
இந்த நிலையில், மன உளைச்சல் காரணமாக குழந்தையை தண்ணீா் தொட்டியில் தள்ளி அக் குழந்தையின் தாய் அா்ஷியா (23) கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அா்ஷியாவை போலீஸாா் கைது செய்தனா்.