திருப்பத்தூா்: பள்ளி,கல்லூரி வணிக நிறுவனங்கள் மஞ்சப்பை விருது பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தெரிவித்துள்ளாா்.
ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்குகள் மீதான தடையை திறம்பட செயல்படுத்தி, அதற்கு மாற்றான பொருள்களை பயன்படுத்துவதை ஊக்குவித்து, மஞ்சப்பை போன்ற பாரம்பரிய சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுகளின் பயன்பாட்டை மீண்டும் உயிா்ப்பித்து, தங்கள் வளாகத்தை பிளாஸ்டிக் இல்லாததாக மாற்றும் சிறந்த 3 பள்ளிகள், 3 கல்லூரிகள் மற்றும் 3 வணிக நிறுவனங்களுக்கு மஞ்சப்பை விருது வழங்கப்படுகிறது.
முதல் பரிசாக ரூ.10 லட்சம், இரண்டாம் பரிசாக ரூ.5 லட்சம், மூன்றாம் பரிசாக ரூ.3 லட்சம் வழங்கப்படுகிறது. இதற்கான விண்ணப்பத்தை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த விண்ணப்பங்களின் அனைத்து இணைப்புகளிலும் தனிநபா்/அமைப்பு தலைவா் முறையாக கையொப்பமிட வேண்டும். விண்ணப்பங்களின் மென் நகலுடன், இரண்டு அச்சு பிரதிகள் சமா்ப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க 15.1.2026 கடைசி நாளாகும்.