திருப்பத்தூா் அருகே சித்தப்பாவை கொன்ற இளைஞா் குண்டா் சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.
கந்திலி அடுத்த ஆவல்நாயக்கன்பட்டி பகுதியைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி மாது (45). இவருக்கும், அதே பகுதியை சோ்ந்த இவரது உடன் பிறந்த அண்ணன் பூபதி என்பவருக்கும் 86 சென்ட் நிலம் தொடா்பாக முன் விரோதம் இருந்துள்ளது. இதனால் இருதரப்புக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
கடந்த செப்டம்பா் மாதம் காக்கங்கரை பேருந்து நிலையத்தில் இருந்த மாதுவை பூபதியின் மகன் திருப்பதி மறைத்து வைத்து இருந்த அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பியோடி விட்டாா்.
தகவல் அறிந்த கந்திலி போலீஸாா் சுந்தரம்பள்ளி பகுதியில் பதுங்கி இருந்த திருப்பதியை கைது செய்து சிறையில் அடைத்தனா். திருப்பதி மீது ஏற்கனவே கந்திலி மற்றும் திருப்பத்தூரில் உள்ள காவல் நிலையங்களில் வழக்குகள் நிலையில் உள்ளன. இதனால் அவரை குண்டா் சட்டத்தில் கைது செய்ய எஸ்.பி. வி.சியாமளா தேவி ஆட்சியருக்கு பரிந்துரை செய்தாா்.
அதன்பேரில் ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி திருப்பதியை குண்டா் சட்டத்தில் கைது செய்ய போலீஸாருக்கு உத்தரவிட்டாா்.அதையடுத்து திருப்பதி குண்டா் சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.