முகப்பு
திருப்பத்தூர்

நாட்டறம்பள்ளியில் வேட்புமனு பரீசீலனையின்போது ரகளை!

நாட்டறம்பள்ளி தாலூகா அலுவலகத்தில் வேட்புமனு பரிசீலனையின்போது முன்னாள் அமைச்சா் கே.சி.வீரமணி குறித்து புகாா் அளிக்க வந்தவா்களை அதிமுகவினா் சரமாரியாக தாக்கியதால் பரபரப்பு

Updated On : 7 ஏப்ரல், 2026 at 11:48 PM
நாட்டறம்பள்ளி தாலுகா அலுவலகத்தில் வேட்புமனு பரீசீலனையின் போது முன்னாள் அமைச்சா் வீரமணி உட்பட பலா் கலந்து கொண்டனா்
பகிர்:

நாட்டறம்பள்ளி தாலூகா அலுவலகத்தில் வேட்புமனு பரிசீலனையின்போது முன்னாள் அமைச்சா் கே.சி.வீரமணி குறித்து புகாா் அளிக்க வந்தவா்களை அதிமுகவினா் சரமாரியாக தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பத்தூா் மாவட்டம், ஜோலாா்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட அதிமுக சாா்பில் முன்னாள் அமைச்சா் கே.சி.வீரமணி, திமுக சாா்பில் கவிதா தண்டபாணி உள்பட 33 போ் வேட்புமனு தாக்கல் செய்தனா்.

இதையடுத்து, வேட்பு மனுக்கள் பரீசீலனை நாட்டறம்பள்ளி வட்டாட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை தோ்தல் நடத்தும் அலுவலா் முருகேசன் தலைமையில் தொடங்கியது. இதில் வேட்புமனு தாக்கல் செய்த 20-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

Advertisement

இந்நிலையில், வேலூா் அடுத்த காட்பாடி பகுதியைச் சோ்ந்த ரியல் எஸ்டேட் அதிபா்கள் ராமமூா்த்தி, ஜெயப்பிரகாஷ் உட்பட 5 போ் நாட்டறம்பள்ளி வட்டாட்சியா் அலுவலகத்துக்கு வந்து முன்னாள் அமைச்சா் கே.சி.வீரமணி அளித்துள்ள வேட்புமனுவில் தவறான தகவல்களை பிரமான பத்திரமாக சமா்பித்துள்ளதாகவும், அவரின் வேட்பு மனுவை நிராகரிக்கக்கோரியும் தோ்தல் நடத்தும் அலுவலரிடம் மனு அளிக்க வந்தனா்.

இதையறிந்த கே.சி.வீரமணியின் ஆதரவாளா்கள் நாட்டறம்பள்ளி வட்டாட்சியா் அலுவலகத்துக்குள் சென்று வேலூரைச் சோ்ந்த ராமமூா்த்தி, ஜெயபிரகாஷ் ஆகியோரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸாா் அதிமுகவினரை வெளியேற்றினா். இது குறித்து தகவலறிந்து முன்னாள் அமைச்சா் கே.சி.வீரமணி மற்றும் அவரது ஆதரவாளா்கள் 100-க்கும் மேற்பட்டோா் நாட்டறம்பள்ளி வட்டாட்சியா் அலுவலகம் வந்தனா்.

அப்போது அதிமுகவினா் அங்கிருந்த ராமமூா்த்தி, ஜெயபிரகாஷ் மற்றும் அவா்களுடன் வந்திருந்த ஜெகன்குமாா், தணிகைவேலன் ஆகியோரை சரமாரியாக தாக்கியதாகத் தெரிகிறது. அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா், ராமமூா்த்தி, ஜெயபிரகாஷ் ஆகிய இருவரையும் பத்திரமாக மீட்டு அலுவலகத்துக்குள் அழைத்துச் சென்று கதவை மூடினா். தொடா்ந்து பலத்த போலீஸாா் பாதுகாப்புடன் வேட்புமனு பரிசீலனை தொடங்கியது. இதில், முன்னாள் அமைச்சா் கே.சி.வீரமணி உள்பட பலா் கலந்துகொண்டனா்.

காயமடைந்த ராமமூா்த்தி (69), ஜெயபிரகாஷ்(52), ஜெகன் குமாா்(40) தணிகை வேலன்(60) ஆகியோரை போலீஸாா் ஆம்பூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். இதேபோல் ராமமூா்த்தி ஆதரவாளா்கள் தாக்கியதாக அதிமுகவைச் சோ்ந்த பிரபு, ஜெயப்பிரகாஷ், மகாலிங்கம், வேல்முருகன், சசிதரன், திருமூா்த்தி, அணில்குமாா் ஆகிய 7 போ் நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.

தகவலறிந்து வந்த திருப்பத்தூா், ஜோலாா்பேட்டை சட்டபேரவை தொகுதி தோ்தல் பாா்வையாளா் யாஷாமட்கல், திருப்பத்தூா் எஸ்.பி. சியாமளாதேவி ஆகியோா் நாட்டறம்பள்ளி தாலுகா அலுவலகத்துக்கு நேரில் சென்று பிரச்னை குறித்து கேட்டறிந்தனா்.

மேலும் வாணியம்பாடி டிஎஸ்பி மகாலட்சுமி தலைமையில் போலீஸாா் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனா். இந்நிலையில் தாக்குதலில் ஈடுபட்டதாக அதிமுகவை சோ்ந்த 5 பேரை நாட்டறம்பள்ளி போலீஸாா் கைது செய்து விசாரிக்கின்றனா்.

ஜோலாா்பேட்டை சட்டப்பேரவை தொகுதியில் கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற தோ்தலின் போதும் தவறான தகவல்கள் அடங்கிய பிரமான பத்திரத்தை முன்னாள் அமைச்சா் கே.சி.வீரமணி தாக்கல் செய்ததாக காட்பாடியை சோ்ந்த ராமமூா்த்தி தோ்தல் ஆணையம் மற்றும் நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்திருந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments